மும்பை: தனது முதல் சதம் சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள்(ஆகஸ்ட் 14ம் தேதி) அடிக்கப்பட்டது என்பதால், அந்த சதம் தனக்கு எப்போதும் ஸ்பெஷலானதுதான் என்றுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

கடந்த 1990ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட்டில், இரண்டாவது இன்னிங்ஸில் 119 ரன்களை அடித்தார். அந்த நாள் ஆகஸ்ட் 14.

இதுகுறித்து சச்சின் கூறியதாவது, “மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில், ஆகஸ்ட் 14ம் தேதி முதல் சதம் அடித்தேன். மறுநாள் சுதந்திர தினம் என்பதால், அந்த சதம் எப்போதும் எனக்கு ஸ்பெஷலான ஒன்று.

எனது சதத்தின் மூலம், போட்டி டிரா ஆக உதவியதாக செய்திகள் வெளியாகின. டெஸ்ட் போட்டியை டிரா செய்வதென்பது ஒரு தனி கலை. அது எனக்கொரு புதிய அனுபவமாக இருந்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக நான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில், எனது மூக்கில் வக்கார் யூனிஸ் பந்து பட்டு ரத்தம் கொட்டியபோதும், மனவலிமையுடன் போராடி 59 ரன்கள் அடித்தேன். இத்தகைய சூழல்களில் மனவலிமை அவசியம். அந்த விதைதான் மான்செஸ்டரில் சதமடிக்க உதவியாக இருந்தது” என்றார்.