கணவன் என்னை அடிக்கமாட்டேங்கிறார்.. விவாகரத்து கொடுங்கள்…! உ.பி.யில் விநோத வழக்கு…

சம்பல்: கணவன் என்னை அடிக்கமாட்டேங்கிறார், கடிந்து பேச மாட்டேங்கிறார், அன்பை மட்டுமே பொழிகிறார், அதனால் எனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து கொடுங்கள் என உ.பி. மாநில ஷரியத் நீதிமன்றத்தில் இளம்பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நாடு முழுவதும் பெண்கள் விவாகரத்து பெற, அன்பில்லாத கணவன், கொடுமைக்கார கணவன், மனக்கசப்பு, கருத்துவேறுபாடு, மாமியார் கொடுமை, பாலியல் கொடுமை, புகுந்த வீட்டால் கொடுமை, குடிகாரன்  போன்ற பல்வேறு காரணங்கள் தெரிவிப்பதைத்தான்  பார்த்திருக்கிறோம்.

ஆனால், உ.பி. மாநிலம் சம்பல் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளம்பெண் ஒருவர்,  தனது கணவரின் அதிகமான அன்பாலும், தன்னிடம் சண்டை போட மறுப்பதாலும்,  தன்னை குழந்தைபோல் பார்த்துக்கொள்ளவதைப் பொறுக்க முடியாமல் ஷரியத்  நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனுவில், தனது கணவன் தன்னை அதிகமாக நேசிக்கிறான், என்னுடன் சண்டையிடுவதில்லை, அவனுடை காதலை ஜீரணிக்க முடியவில்லை, சில சமயங்களில் அவர் எனக்காக சமைக்கிறார், வீட்டு வேலைகளையும் செய்ய உதவுகிறார், அவர் ஒருபோதும் என்னிடம் கத்தி பேசவோ, சண்டையிடவோ, என்னை ஏமாற்றவோ மறுக்கிறார். இதுபோன்ற கூடுதலான அன்பு எனக்கு நரகமாக இருக்கிறது. என்னை எந்தவிதமான கொடுமையும், கொடுஞ்சொல் கொண்டும் பேசுவதில்லை. என் கணவரின் அன்பும், கனிவான பேச்சும் நாளுக்கு நாள் உச்சத்தை அடைகிறது.

எந்தவொரு பிரச்சினைக்காகவும்,   நான் தவறு செய்யும் போதெல்லாம், அவர் எப்போதும் என்னை மன்னித்தே வருகிறார்,  நான் அவருடன் வாதிட விரும்பினேன். ஆனால், அவரை ஒத்துக்கொள்ள மறுக்கிறார், அவர் என்னை அடிப்பதில்லை, சண்டையிடுவதில்லை. இதனால், தனக்கு மூச்சு முட்டுகிறது. எல்லாவற்றுக்கும் ஒப்புக் கொள்ளும் ஒரு வாழ்க்கை எனக்குத் தேவையில்லை என்று அந்த பெண் மேற்கோளிட்டுள்ளார்.

திருமணமாகி 18 மாதங்களுக்கு பிறகு, அந்த இளம்பெண் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

விவாகரத்து கோருவதற்கான காரணத்தை அந்தப் பெண் கூறியபோது ஷரியத் நீதிமன்ற மதகுரு குழப்பமடைந்தார். இதுகுறித்து விசாரித்த ஷரியா நீதிமன்றம்,  விவாகரத்து கோருவதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியது.

அதற்கு, எதிர்மறையாக பதிலளித்த அந்த பெண், தனக்கு விவாகரத்து தேவை, இதுபோன்ற வாழ்க்கை தேவையில்லை என்று வலியுறுத்தினார்.

இதற்கிடையில், அந்தப் பெண்ணின் கணவர் தனது மனைவியை, தான்  எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவதாகவும், நான் எப்போதும் சிறந்த கணவராக, கனிவான கணவராக இருக்கவே விரும்புகிறேன் என்றும்,  வழக்கை திருப்பித் தருமாறு அவர்  நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளர்.

இதையடுத்து, இந்த விவகாரத்தை இருவரும், பரஸ்பரம் தீர்த்துக்கொள்ளும்படி நீதிமன்றம் இப்போது தம்பதியிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

விவாகரத்துக்கு இளம்பெண் கூறிய காரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இன்றைய இளைய தலைமுறையின் மனநிலை எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது…