Random image

என் தலைமைப் பொறுப்பை ஸ்டாலின் தட்டிப்பறித்தார்!: உதயநிதி ஸ்டாலின் சுவாரஸ்ய பேச்சு

தனது தலைப்பொறுப்பை மு.க.ஸ்டாலின் தட்டிப்பறித்துவிட்டதாக அவரது மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் இல்லத் திருமண விழா, தஞ்சாவூரில் நேற்று நடந்தது. இதில்,  தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், அவரது மகனும் நடிகருமான உதயநித ஸ்டாலின் உட்பட பலர்  கலந்துகொண்டு  வாழ்த்திப் பேசினார்.

 

உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, திருமண அழைப்பிதழில் தலைமை என தனது பெயர்தான் அச்சிடப்பட்டிருப்பதாகவும் ஆனால் தன் தலைமை பொறுப்பை ஸ்டாலின் தட்டி பறித்து விட்டதாகவும், பேசினார்.

ஸ்டாலின் பேசும்போது இதற்கு பதில் அளித்தார். அப்போது அவர்,  பேசியதாவது: உதயநிதி பேசும்போது, அவருக்கு வழங்கப்பட்ட தலைமைப் பொறுப்பை, நான் பறித்துக் கொண்டதாக ஏக்கத்தோடு தெரிவித்தார். எனக்கு வழங்கப்பட்டுள்ள தலைமைப் பொறுப்பை, யாராலும் தட்டிப் பறிக்க முடியாது.

நான் வெளிநாடு செல்ல வேண்டி இருந்ததால், அன்பில் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நான் வர இயலாத காரணத்தால், உதயநிதி பெயரை தலைமைப் பொறுப்பிலே இணைத்து நடத்துவதாக முடிவு செய்துள்ளனர். ஆனால், நான் மேற்கொள்ளவிருந்த அந்தப் பயணத்தை ஒத்திவைத்து, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். அதனால், உதயநிதி தவறாக கருத வேண்டாம்” என்று ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

உதயநிதியின் பேச்சையும், அதற்கு ஸ்டாலின் பதில் அளித்த்தையும் விழாவுக்கு வந்திருந்தோர் வெகுவாக ரசித்தனர்.