என் அரசியல் தேர்தல் அரசியல் அல்ல!: உதயநிதி ஸ்டாலின்

சென்னை:

தான் அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டதாக இரு நாட்களுக்கு முன் கூறிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், தனது அரசியல் தேர்தல் அரசியல் அல்ல என்று இன்று தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும், செயல் தலைவர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி, திரைப்படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். பிறகு நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இரு நாட்களுக்குமுன், தான் தீவிர அரசியலில் ஈடுபடும் நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்தார்.

மேலும், “எனது தாத்தா, அப்பா உள்ளிட்ட பலருக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளேன். எனது திரைப்படத்திற்கு வரி விலக்கு மறுக்கப்பட்டபோதே நான் அரசியலுக்கு வந்து விட்டேன். இன்னும் சொல்லப்போனால் திரைத்துறைக்கு வருவதற்கு முன் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டிருந்தேன். பிறகுதான் கொஞ்சம் விலகியிருந்தேன்” என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்று, தேர்தல் அரசியலுக்கு தான் வரப்போவதில்லை என்கிற கோணத்தில் பேசியிருக்கிறார்.

இது குறித்து அவர், “என் அரசியல் தேர்தல் அரசியல் அல்ல.  தொண்டர்களுடன் பயணிப்பதே என் அரசியல்” என்று தெரிவித்துள்ளார்.

இரு நாட்களில் மனமாற்றம் ஏற்பட என்ன காரணம் என்று தெரியவில்லை.