சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக வேட்புமனு தாக்கல் செய்த நடிகர் விஷாலின் மனுவை தள்ளுபடி செய்த தேர்தல் அலுவலர், பின்னர் விஷாலின் ஆதாரத்தை தொடர்ந்து பரிசீலனை செய்வதாக அறிவித்தார்.

பின்னர் நள்ளிரவு அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக மீண்டும் அறிவித்தார். இதுகுறித்து விஷார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனது மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் சொன்ன வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர் அறிவித்ததை கேட்டுத்தான்  அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.

மக்களுக்கு நல்லது செய்யவே நான் தேர்தலில் போட்டியிட நினைத்தேன். ஆனால், அதில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. படத்தில் நடப்பது போல நிமிடத்திற்கு நிமிடம் நிஜ வாழ்க்கையில் திருப்பங்கள் நடைபெறுகிறது.

ஜனநாயக நாட்டில் சுயேச்சை வேட்பாளர் போட்டியிடக் கூடாதா? மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் இது தான் கதியா? என்று கூப்பாடு போட்ட விஷால்,   கடந்த முறை பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் நிறுத்தப்பட்டது, இந்த முறை ஆட்களையே தூக்கும் அளவிற்கு கீழ்த்தரமாக போயுள்ளது என்று கூறினார்.

இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. எதற்காக என்னுடைய மனு நிராகரிக்கப்பட்டது என புரியவில்லை. என்னைக் கண்டு ஏன் அச்சப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்றார்.

மேலும் தனது  வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்படும் என்றும்,

எனது வேட்புமனுவை முன்மொழிந்தவரை மிரட்டியது மதுசூதனன் ஆட்களா என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். முன்மொழிந்தவர்கள் இரண்டு பேரின் வீட்டின் முன்பு ஆளும்கட்சியின் ஆட்கள் இருந்து கொண்டு மிரட்டுகின்றனர் என்றனர்.

மேலும், இந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஒருவரை ஆதரித்து அவரை வெற்றியடையச் செய்வேன். நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்வேன்.

இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.