திருவனந்தபுரம்,

ன்னை சஸ்பெண்டு செய்துள்ளதான் காரணமாக நேர்மையான அதிகாரிகளுக்கு கேரள  அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாக, சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட கேரள டி.ஜி.பி ஜேகப் தாமஸ் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த டிசம்பர் 9ம் தேதி நடைபெற்ற  ஊழலுக்கு ஒழிப்பு தினத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கேரள டிஜிபி தாமஸ்,

கேரளத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், மாநிலத்தின் உயர் பதவிகளில் ஊழல் சக்திகள் கோலோச்சுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், ஒக்கி புயல் பாதிப்பை, கேரள அரசு சரியாக கையாளவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், மாநில அரசுப் பணியாளர் பயிற்சி நிறுவன இயக்குநர் பதவியில் இருந்து ஜாகோப் தாமஸை பணியிடை நீக்கம் செய்து கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

அகில இந்தியப் பணிகள் சட்டப் பிரிவுகளின்கீழ், முதல்வர் பினராயி விஜயன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஜேக்கப் தாமஸ் கூறுகையில், ஊழல் எதிர்ப்பு தினத்தில் ஊழலுக்கு எதிராக மட்டுமே நான் பேசினேன். இந்த நடவடிக்கை மூலம் எனது குரலை ஒடுக்க முடியாது என்று கருத்து தெரிவித்துள்ள தாமஸ்  “நான் பேசியதுக்காக இப்போதும் வருந்தவில்லை. எனது இடைநீக்கம்  ஊழலுக்கு எதிரான எனது நிலைப்பாட்டின் மீதான தாக்குதல். நேர்மையான அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. நேர்மையானவர்களை அரசு பாதுகாக்க வேண்டும்”.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.