எனது பாதை எது என்பதை நான் ஏற்கனவே முடிவு செய்து விட்டேன்: சென்னை விமான நிலையத்தில் கமல் பதில்

சென்னை:

க்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சென்றிருந்த கமல்ஹாசன் 2 நாட்கள் டில்லியில் முகாமிட்டு காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த நிலையில் நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார்.

அவரிம் செய்தியாளர்கள், காங்கிரசுடன் கூட்டணி சேர முயற்சியா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கமல், எனது பாதை எது என்பதை நான் ஏற்கனவே முடிவு செய்து விட்டேன் என்று கூறினார்.

டில்லியில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மற்றும் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து பேசியது தமிழகத்தில்  பரபரப்பாக பேசப்பட்டது. ஏற்கனவே காங்கிரஸ் கூட்டணியில்  திமுக இடம்பெற்றுள்ள நிலையில், கமலின் திடீர் சந்திப்பு பல்வேறு யூகங்களை கிளப்பியது. மேலும், தமிழக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டது.

கமல்ஹாசனைச் சந்தித்தது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராகுல், தங்களது சந்திப்பு மகிழ்ச்சிகரமாக அமைந்ததாகவும்,  தமிழக அரசியல் சூழல் உட்பட, இரு கட்சிகள் சார்ந்த பிரச்சினைகள் குறித்து இருவரும் விரிவாகப் பேசியதாக தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு அடித்தளமாக இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கும் என்று அரசியல் விமர்சகர்களால்  கூறப்பட்டது.

இந்த நிலையில்  சென்னை திரும்பிய கமல், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேட்ட கேள்வியும் அதற்கு கமல் அளித்த பதில்களும் வருமாறு

அகில இந்திய காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி,  சோனியா காந்தியை சந்தித்து பேசியது காங்கிரசுடன் கூட்டணி சேருவதற்கான அச்சாரமா? என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு,  சோனியா, ராகுல் காந்தி இருவரையும் மரியாதை நிமித்தமாகவே சந்தித்து பேசினேன். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தோம். நீங்கள் நினைப்பது போல கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. என்று மறுத்தார்.

காங்கிரஸ் தலைவர்களை சந்தித்ததால் நான் ஒருவழி பாதையில் செல்வதாக நினைத்து விட வேண்டாம். எனது பாதை எது? என்பதை நான் ஏற்கனவே முடிவு செய்து விட்டேன் என்றும் கூறினார்.

தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற்ற  பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுமா? என கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த கமல்,  கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி விரைவில் முடிவை அறிவிப்பேன் என்றார்.

மேலும், காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் தங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்ற கேள்விக்கு,  காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் அனைத்து முடிவுகளும் வித்தியாச மானதாகவே உள்ளது.  காவிரி ஆணையத்தை முறையாக செயல்படுத்த நாம் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். எல்லா விதமான அழுத்தங்களையும் தர வேண்டும். மத்திய அரசின் செயல்பாடுகளை  ஒவ்வொரு முறையும் விமர்சித்து கொண்டேதான் இருக்கிறோம். தொடர்ந்து விமர்சிப்போம் என்று கூறினார்.

மேலும்,  காவிரி விவகாரத்தில் உண்மையிலேயே வெற்றி விழாவை கொண்டாட வேண்டிய வர்கள் விவசாயிகள்தான். நாம் அதனை வழிமொழிய வேண்டும். அதற்கு முன்னாடியே அ.தி.மு.க. அரசு சாவிக்கு ஆசைப்படுவதையே காட்டுகிறது.

இவ்வாறு நடிகர் கமலஹாசன் கூறினார்.