ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, சட்டப்பேரவையில் நேற்று நம்பிக்கை வாக்கு கோரியது.

அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய முன்னாள் துணை முதல்வர் சச்சின் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்கள் , நீண்ட சமரச முயற்சிக்கு பின் மீண்டும் தாய் கட்சிக்கு திரும்பினர்.
இதனால் அசோக் கெலாட் அரசு ,நம்பிக்கை தீர்மானத்தின் மீதான குரல் ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றது.

அப்போது ஆவேசமாக பேசிய அசோக் கெலாட்’’ நான் வெற்றி பெற்றிருப்பது, மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்க்க நினைத்தவர்களுக்கு சரியான பாடம். மத்தியபிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரா, கோவா, மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிகழ்த்தியது போல், ராஜஸ்தானிலும் தந்திரங்களை கையாண்டது, பா,ஜ.க. ஆனால் பலிக்க வில்லை’’ என்று சாடியவர், தனக்கு மூன்றாம் நம்பர் ராசியானது என்பதை கோடிட்டு காட்டினார்.

‘’நான் மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளேன். மூன்று முறை மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்துள்ளேன். அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியிலும் மூன்று முறை இருந்தேன். இப்போது மூன்றாவது முறையாக முதல்வர் பதவி ஏற்றுள்ளேன்’’ என்று தெரிவித்தார், அசோக் கெலாட்.

-பா.பாரதி.