மைசூரு தசரா திருவிழா: பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு எடியூரப்பா அழைப்பு!

பெங்களூரு:

லகப்புகழ் பெற்ற மைசூரு தசரா திருவிழாவில் பங்கேற்க வருமான பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.

உலகப் புகழ்பெற்றதும், பாரம்பரியம் மிக்கதுமான மைசூரு தசரா திருவிழா வரும் 29ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 8ந்தேதி முடிவடைய உள்ளது. இந்த ஆண்டு தசரா திருவிழா 409வது ஆண்டாக கொண்டாடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து இறுதி நாளான அக்டோபர் 8ந்தேதி, பிரமாண்ட யானைகள் ஊர்வலம் இடம்பெறுகிறது.

தசரா விழாவின் போது மைசூரு அரண்மனையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள மண்டபம் வரை ஜம்போ எனப்படும் யானை சவாரி ஊர்வலம் நடைபெறும். இதில் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்தபடி அர்ஜூனா யானை கம்பீரமாக வலம் வரும். இதைக்காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மைசூரில் குவிவது வழக்கம்.

இந்த நிலையில், மைசூரு நகரில் நடைபெறும் தசரா திருவிழாவில் சிறப்பு விருந்தனராக கலந்து கொள்வதற்காக, கர்நாடக அரசு சார்பில் மாநில முதல்வர் எடியூரப்பா, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தங்க மங்கை பி.வி.சிந்துவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால், எடியூரப்பாவின் அழைப்பை சிந்து ஏற்றுக்கொண்டாரா என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.