15பேரை பலி கொண்ட மைசூர் கோவில் பிரசாதம்: கோவில் மேலாளர் மனைவி கைது

மைசூர்:

கோவில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதில், அதை சாப்பிட்ட 15 பேர் உயிரிழந்துள்ள  நிலையில், விஷம் கலந்தது யார் என்பது தெரிய வந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில், மைசூர் மாவட்டம் சாம்ராஜ் நகர் பகுதியில் உள்ள பிரபல மான கோயிலில்  கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற  சிறப்பு பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதை சாப்பிட்ட நூற்றுக்கணக்கானோர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இவர்களில் இதுவரை 2 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியான நிலையில், மேலும் 100க்கும்மேற்பட்டோர் இன்னும்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விஷம் கலந்த உணவை சாப்பிட்ட காகம் உள்பட பல்வேறு பறவைகளும் இறந்து விழுந்தன. சுமார் 60க்கும் மேற்பட்ட காக்கை, குருவிகள் இறந்து விழுந்துள்ளதாக கூறப்பட்டது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கோவில் நிர்வாகம் தொடர் பாக இரு தரப்பினருக்கு  இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக  விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.

இதுதொடர்பாக ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் சின்னப்பா, மாதேஷ் ஆகிய இருவர் கைதாகினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரசாதத்தில் விஷம் கலந்தது யார் என்பது தெரிய வந்ததுள்ளது.

கோவில் கட்டுப்பாடு விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது தொடர்பான பிரச்சினை யில், அந்த கோவிலின் மேலாளரின் மனைவி அம்பிகா பிரசாதத்தில் விஷம் கலந்தது தெரிய வந்துள்ளது.

அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக 7 பேர் மீது புகார் பதியப்பட்டு உள்ளது. அதில் கோவில் டிரஸ்டி சின்னப்பி, கோவில் மேலாளர் மாதேஷா, கோவில் பூசாரி மகாதேவா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.