மைசூர் கோவில் பிரசாதம்: இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்! குமாரசாமி அறிவிப்பு 

மைசூரு:

மைசூர் கோவில் பிரசாதம் சாப்பிட்டு உயிரிழந்தவர்கள்  குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் குமாரசாமி அறிவித்து உள்ளார்.

மைசூர் மாவட்டம் சாம்ராஜ் நகர் அருகே உள்ள காம்கரே கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமையையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையை தொடர்ந்து வழங்கப்பட்ட பிரசாதத்தில் விஷம் கலந்திருந்ததால் அதை சாப்பிட்ட பக்தர்கள் கொத்துக்கொத்தாக மயங்கி விழுந்தனர். பலர் வயிற்று வலியால் துடித்தனர்.

சர்ச்சைக்குரிய மைசூர் சாம்ராஜ்நகர் கோவில்

விஷம் கலந்த உணவை சாப்பிட்டவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  பிரசாதத்தை சாப்பிட்ட ஏராளமான காக்கை குருவிகளும் உயிரிழந்தன.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மாநில முதல்வர் குமாரசாமி உடடினயாக மைசூர் விரைந்தார். மைசூர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர்களை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த முதல்வர் குமாரசாமி

மேலும், சிகிச்சைப் பெற்று அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கவும் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பக்தர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், விஷம் கலந்தது சம்பந்தமாக 2 பேரை கைது செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

கோயிலை புனரமைப்பதில் இரு பிரிவினரிடையே பிரச்னை என்றும் ஒரு தரப்பினர் பிரசாதத்தில் விஷம் கலந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கோயிலை தற்காலிகமாக மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.