2ஜி விவகாரம்: மர்ம மரணம் அடைந்த சாதிக் பாட்சாவின் மனைவி எழுதும் அதிரடி புத்தகம்!

நியூஸ்பாண்ட்:

று வருடங்களுக்கு முன் (2011ல்) இதே மார்ச் 16ம் தேதி… ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிரச் செய்த..தமிழகத்தை இன்னும் கூடுதலாய் அதிரச் செய்த அந்த மரணம் நிகழ்ந்தது.

அது – சாதிக்பாட்சாவின் மரணம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியிருக்கும் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக்பாட்சாவையோ அவரது மரணத்தையோ எவரும் மறந்திருக்க முடியாதுதான். ஆனாலும் சுருக்கமான ப்ளாஷ்பேக்.

ஆ.ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரைச் சேர்ந்தவர் சாதிக் பாட்சா. இவரும் நெருங்கிய நண்பர்கள். சென்னையில் கிரீன் ஹவுஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வந்தார் சாதிக்.

ராசா, மத்திய அமைச்சரான பின்னர்தான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது என்பதால் சாதிக்கும் ஸ்பெக்ட்ரம் விசாரணை வளையத்தின் கீழ் வந்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய மத்திய அமைச்சர் ராசா, பதவியையும் இழந்தார்.  தொடர்ந்து அவருக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ அதிரடி ரெய்டுகளை நடத்தியது. ரெய்டுக்குள்ளானவர்களில் சாதிக் பாட்சாவும் ஒருவர்.

இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி.. தனது சென்னை தேனாம்பேட்டை  வீட்டில் உயிரற்ற உடலாக தூக்கில் தொங்கியபடி கிடந்தார் சாதிக்பாட்சா.

சம்பவத்தன்று அவரது அறை நீண்ட நேரமாக மூடியிருந்தது. இதையடுத்து  அவரது உறவினர்கள், அறைக் கதவை உடைத்து உள்ளே போய்ப் பார்த்தனர். சாதிக்பாட்சா, உயிரற்ற உடலாக தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.

சாதிக்பாட்சா

உடனடியாக அவரது உடலை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சாதிக் பாட்சா ஒரு முக்கிய நபர் என்பதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் அப்ரூவராக திட்டமிட்டிருந்தார் என்று ஒரு தகவல் பரவி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “சிபிஐ விசாரணை பெரும் மன உளைச்சளை ஏற்படுத்தியது” என அவர் கடிதம் எழுதி வைத்திருந்தாகவும் கூறப்பட்டது.

கிரீன் ஹவுஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ராஜாவின் சகோதரர் உள்ளிட்டோர் பங்குதாரர்கள். இதில் சாதிக் மரணத்துக்குப் பிறகு, அவருக்கு உரிய பங்கு தரப்படவில்லை என்றும் சாதிக் குடும்பத்தினர் அதிருப்தியில் இருக்கின்றனர் என்றும் தகவல் பரவியது.

தற்போது  அந்த நிறுவனத்தில் உள்ள சாதிக் சொத்துக்களை திரும்பத்தர வேண்டி, கம்பெனி லா போர்டில் சாதிக்கின் மைத்துனர் வழக்கு தொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரபாகரன்

இந்த நிலையில் கடந்த வருட (2016)  சாதிக்பாட்சா நினைவுதினத்தில்,  ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது. சாதிக்பாட்சா  படத்துடன் “செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயே..” என்ற வாசகத்துடன் இருந்தது அந்த போஸ்டர். பெரம்பூர் பகுதியில் ஒட்டப்பட்ட அந்த போஸ்டர், நாளிதழ்கள் சிலவற்றில் விளம்பரமாகவும் அளிக்கப்பட்டிருந்தது. அதோடு சமூகவலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் பிறகு கடந்த வருடம் (2016)  மே மாதம் பிரபாகரன் திருச்சி “சாதிக்பாட்சா தற்கொலை செய்துகொள்ளவில்லை.

திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரபாகரன் என்கிற இளைஞர், “சாதிக் பாட்ஷாவை நாங்கள் கொலை செய்தோம்’ என்று சூட்டைக் கிளப்பினார்.

ஆ.ராசாவின் அக்காள் மகன் பரமேஸ்குமார் , காவல்துறை அதிகாரி ஜாபர் சேட, ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமார் ஆகியோருடன் தானும் சேர்ந்து சாதிக்பாட்சாவை கொலை செய்ததாக கூறினார்.

அந்த விவகாரம் அத்தோடு அமுங்கியது.

ம.தி.மு.கழக தலைவர் வைகோ, “சாதிக்பாட்சா கொலை பின்னணியை விசாரிக்கவேண்டும். அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை. 2 ஜி ஊழலில் தி.மு.கழக பிரமுகர்களை காப்பாற்றவே அவர் கொல்லப்பட்டிருக்கிறார்.” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதற்காக அவர் மீது மானநட்ட வழக்கு தொடுக்கப்படும் என்றெல்லாம் எதிர் தரப்பில் சொல்லப்பட்டது. அதுவும் அத்தோடு அமுங்கியது.

இந்த நிலையில் சாதிக் மரணம் குறித்த சர்ச்சை மீண்டும் விஸ்வரூபம்  எடுக்க இருக்கிறது என்கிறார்கள் தகவல் அறிந்தவர்கள்.

நினைவஞ்சலி போஸ்டர்

அதாவது, சாதிக்பாட்சாவுக்கும், ஆ.ராசாவுக்கும்  இடையே இருந்த நட்பு, தொழில் தொடர்புகள்,  தற்போது தாங்கள் ஏமாற்றப்பட்ட நிலை எல்லாவற்றையும் புத்தகமாக எழுதிக்கொண்டிருக்கிறாராம் சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹ்னா.

குறிப்பாக சாதிக்பாட்சாவின் மரண மர்மத்தை அந்த புத்தகத்தில் உடைக்கப்போகிறாராம்.

இந்த தகவல் அறிந்த எதிர் தரப்பினர், “புத்தகம் எழுத வேண்டாம். வாக்கு கொடுத்தபடி நடந்துகொள்கிறோம்” என்று தூது அனுப்பியிருக்கிறார்கள்.

அதற்கு ரெஹ்னா., “எனது பாசத்துக்குரிய கணவரை பறிகொடுத்தேன்.ஆனாலும் எங்கள் குழந்தைகளுக்காத்தான் எவ்வளவோ பொறுத்துக்கொண்டிருந்தேன். இனியும் ஏமாறத்தயாரில்லை. கண்டிப்பாக புத்தகம் வெளியாகும்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம்.

இப்போது எதிர் தரப்பு அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது.

அதே நேரம்,  சாதிக்பாட்சா குடும்பத்தின் நலம் விரும்பிகள், இன்னொரு அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்ற பதைபதைப்பில் இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.