பெங்களூரு:

பிரதமர் மோடி வந்திறங்கியபின், கர்நாடக ஹெலிகாப்டர் தளத்திலிருந்து மர்ம கருப்புப் பெட்டி எடுத்துச் செல்லப்பட்டது குறித்து, தேர்தல் விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் ஊடகத் தொடர்பாளர் ஸ்ரீவத்சவா, 14 வினாடி ஓடக்கூடிய வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனை மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பகிர்ந்திருந்தார்.

அதில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் பிரச்சார பேரணியில் பங்கேற்க கர்நாடகாவுக்கு பிரதமர் மோடி வந்தார்.
சித்ரதுர்கா விமானப்படை அவர் வந்த ஹெலிகாப்டர் தரையிறங்கிய பின், அதிலிருந்து மர்ம கருப்புப் பெட்டியை 2 பேர் தூக்கிச் சென்று இன்னோவா காருக்குப் பின் இருக்கையில் வைத்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றும், அந்த கருப்புப் பெட்டியில் இருந்தது என்ன? பெட்டியை எடுத்துச் சென்ற வாகனம் யாருடையது? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

எனினும், மோடி இறங்குவதையோ, பெட்டி ஹெலிகாப்டரிலிருந்து இறக்கப்படுவதையோ அந்த வீடியோவில் காட்டவில்லை. 2 பேர் மட்டும் பெட்டியை தூக்கிக் கொண்டு அவசரமாக செல்கின்றனர். மோடி கர்நாடகாவுக்கு ஏப்ரல் 9-ம் தேதி வரவில்லை என்று கூறப்படுவது பற்றியும் மறுப்பு வெளியாகியுள்ளது.

இந்த சந்தேகத்துக்கு பதில் அளித்துள்ள ஸ்ரீவத்சவா, அந்த பெட்டி ஏன் பாதுகாப்பு வரையறைக்குள் வரவில்லை? பிரதமர் பயணிக்கும் போது கூடவே இந்த இன்னோவா காரும் ஏன் சென்றிருக்கக் கூடாது? அது யாருடைய கார்? என கேள்வி எழுப்புகிறார்.

பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு தரப்பட்ட இடத்திலிருந்து அங்கீகாரம் பெற்ற நபர்களும், வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று காங்கிரஸார் சந்தேகம் எழுப்புகின்றனர்.

இது குறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் கூறும்போது, எங்கள் கவனத்துக்கு வந்தபின், உடனே கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தெரிவித்துள்ளோம். தேர்தல் விசாரணைக் குழு இதனை விசாரிக்கும் என்றனர்.