ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: 2ஆண்டுகளுக்கு பிறகு சொல்லும் அமைச்சர் சிவி சண்முகம்

சென்னை:

முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக சட்ட அமைச்ர் சிவி.சண்முகம் தெரிவித்து உள்ளார்.

2 ஆண்டுகளுக்கு தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தற்போது பரபரப்பு குற்றச்சாட்டுக் களை கூறியிருப்பபது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலமில்லாமல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் குறித்த சர்ச்சை இன்றளவும் தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து விசாரணை ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், விழுப்புரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு  தொடர்பான கண்காட்சி மற்றும் பேரணியை தொடங்கி வைத்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல  திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.

ஜெயலலிதா சாவில் சந்தேகம் இருப்பது உறுதியாகி உள்ளது. ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கவிடாமல் தடுத்தது யார்? என்று ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றும், ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோகிராம் செய்யவிடாமல் தடுத்தது யார்? என்பது தெரிய வர வேண்டும் என்றும் கூறினார்.

அப்போது செய்தியாளர்கள், அப்போலோ கொடுத்துள்ள மருத்துவ  செலவு கணக்கில் உணவுக் காக மட்டும் ரூ.1 கோடி செலவிடப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர்,  மருத்துவமனையை உல்லாச விடுதியாக்கி தங்கியிருந்து இட்லி-தோசை சாப்பிட்டு ரூ.1 கோடி அளவுக்கு சசிகலா குடும்பத்தினர் செலவு செய்துள்ளனர் என்றும்,  சசிகலா தரப்பினர் உண்மையான ஆவணங்களை மறைத்து  பொய்யான தகவல்களை ஆணையத்தில் தெரிவித்து வருகின்றனர் என்றார். இதன் காரணமாகத்தான், சசிகலாவை தவிர அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார் என்றும் தெரிவித்தார்.

அதனால்தான்  ஜெயலலிதா மரணம் குறித்து அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகவும், ஜெயலலிதா சாவில் உள்ள உண்மை விபரங்களை வெளியிட வேண்டும் என்ற அமைச்சர், ஜெயலலிதாவுக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிரோடு இருந்திருப்பார்  என்றும் கூறினார்.

ஜெயலலிதா மரணம் வழக்கில் சுகாதாரத் துறை செயலரை விசாரிக்க வேண்டும் என்றவர், ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதை தடுத்திருக்கிறார்கள்.. இதனால்  ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகி உள்ளது… ஜெயலலிதா மரணத்தை சந்தேகத்திற்கு இடமான மரணம் என வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.