மைசூர் மகாராஜா தொடங்கி வைத்த புராதன பள்ளி புனரமைப்பு பணி

பெங்களூரு

பெங்களூரு நகரின் சாமராஜ்பேட்டையில் அமைந்துள்ள 111 வருடப் பழமையான பள்ளியின் புனரமைப்பு பணிகளை மைசூர் மகாராஜ கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தொடங்கி வைத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் சாமராஜ் பேட்டையில் அமைந்துள்ளது ஃபோர்ட் உயர்நிலைப் பள்ளி.    சுமார் 111 வருடங்கள் பழமை வாய்ந்த இந்தப் பள்ளி கர்நாடக மாநிலத்தின் மிகப் புகழ்பெற்ற பள்ளியாகும்.   இந்தப் பள்ளி அந்தக் கால மைசூர் மாநிலத்தின் முதல் உயர்நிலைப்பள்ளி ஆகும்.   புகழ் பெற்ற இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்களில் மைசூர் அரசர் ஜெயசாமராஜேந்திர உடையார், முன்னாள் முதல்வர் அனுமந்தையா,  வி எஸ் கிருஷ்ண ஐயர்,  மற்றும் கிரிக்கெட் வீரர் விஸ்வநாத் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

தற்போது இந்த பள்ளிக் கட்டிடம் மிகவும் சிதிலம் அடைந்துள்ளது.   அதை ஒட்டி கர்நாடக மாநில பிரமுகர்கள் பலர் இந்த பள்ளியின் புனரமைப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர்.    முழுக்க முழுக்க தனியார் நன்கொடையில் நடைபெற உள்ள இந்தப் பணி  இந்திய தேசிய புராதன கலை மற்றும் கலாச்சார அமைப்பின் மூலம் நடைபெற உள்ளது.

இந்தப் பணியின் தொடக்க விழாவில் தற்போதைய மைசூர் மகராஜா மகாராஜ கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் பணிகளை தொடங்கி வைத்தார்.   இந்த விழாவில் கர்நாடக மாநிலத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.   புனரமைப்பு பணிகளை நடத்தும் குழுவின் தலைவர் மீரா ஐயர் . “இந்த பள்ளியின் புனரமைப்பு பணிக்கு ரூ.2.5 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  சுவர்கள் மற்றும் கூரைகளை இப்போதுள்ள வடிவிலேயே பழுது பார்க்கப்படும்.   நீர் உள்ளே புகாத வண்ணம் வாட்டர் புரூஃபிங் செய்யப்படும்,    படிகள் மற்றும் தரைகள் பழுது பார்க்கப்படும்.”  என தெரிவித்துள்ளார்.