டில்லி

தேசிய மருந்து விலை நிர்ணய அமைப்பின் வழிகாட்டுதலின்படி என் 95 முக கவசங்களின் விலை 47%  குறைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவுவதைத் தடுக்க முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  முகக் கவசங்களில் பல வகைகள் உள்ளன.  துணி மற்றும் காகிதங்களால் செய்யப்பட்ட ஓரடுக்கு மற்றும் பல அடுக்கு முகக் கவசங்கள் சந்தையில் அதிகம் உள்ளன.  இதில் என் 95 முகக்கவசம் என்பது தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் உயர்தரமாகும்.

இதைப் பயன்படுத்துவதன் மூலம்  மிகச் சிறிய தூசி மற்றும் கிருமிகள் வடிகட்டப்படுகின்றன. எனவே இதைப் பலரும் விரும்பி பயன்படுத்துகின்றனர். என் 95 முகக்கவசங்கள் அதிக தேவை உள்ளதால் அவை பதுக்கப்பட்டு கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தன.  இந்த முகக் கவசங்கள் கிடைப்பதே அரிதாகிக் கிடைத்த இடங்களிலும் அதிக பட்ச விற்பனை விலையைப் போல் பன்மடங்கு அதிக விலையில் விற்கப்பட்டன

இந்த என் 95 வகை முகக் கவசங்களை இந்தியா அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவித்தது.   எனவே தேசிய மருந்து விலை நிர்ணய அமைப்பு என் 95 முகக் கவசங்களை அதிக விலைக்கு விற்கத் தடை செய்துள்ளது.   ஏற்கனவே அனைத்து ரக முகக் கவசங்கள், சானிடைசர்கள், கையுறைகள் போன்றவற்றுக்கும் இதே தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது அரசு அறிவித்துள்ள அறிக்கையில், “சந்தையில் என் 95 முகக்கவசங்கள் ரூ.150 முதல் ரூ.300 வரை விற்கப்பட்டு வந்தன.  தற்போது தேசிய மருந்து விலை நிர்ணய அமைப்பின் வழிகாட்டுதலுக்கு இணங்க சுமார் 47% வரை விலை குறைக்கப்பட்டுள்ளன.  இதனால் நாடெங்கும் இந்த என் 95 முகக்கவசங்கள் நியாயமான விலையில் கிடைக்கும்.

மக்களுக்கு என் 95 முகக் கவசங்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு இதன் உற்பத்தியை அதிகரிக்க தொழிற்சாலைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.  அத்துடன் இவற்றை நேரடியாக அரசு கொள்முதல் செய்து விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது.  எனவே இனி நியாயமான விலையில் மக்களுக்கு என் 95 முகக் கவசங்கள் கிடைக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.