கோவை வேளாண் பல்கலை கழக புதிய துணைவேந்தராக என்.குமார் நியமனம்

கோவை:

கோவை வேளாண் பல்கலை கழகத்திற்கு புதிய துணைவேந்தராக டாக்டர் என். குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்து உள்ளார். இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள்.

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு ஏற்கனவே துணைவேந்தராக இருந்து வரும்  ராமசாமியின் பதவிக்காலம் 17ந்தேதியுடன் முடிவடைகிறது. அவர்  ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய துணைவேந்தர் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது.

இதற்காக சுமார் 55 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில்  தகுதியான 11 பேர் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதுகுறித்த விவரங்களும்  இணைய தளத்தில் வெளியிடப்பட் டது.

இதற்கிடையில், விண்ணப்பித்த நபர் ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தனது விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என்றும், துணைவேந்தர் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கின் விசாரணையின்போது, அரசு தாக்கல் செய்த பதில் மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதி மன்றம், தடை விதிக்க மறுத்து, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதைத்தொடர்ந்து வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், புதிய துணைவேந்தராக டாக்டர் என். குமார் என்பவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் நியமித்து உள்ளார்.

புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட  குமார்,  தோட்டக்கலை கல்லூரியின் முதல்வராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்றும்,  22 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியும் உள்ளார். மேலும் வேளாண்மை சம்பந்தமாக  இதுவரை 8 புத்தகங்கள் எழுதியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.