ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியத்திற்கான தேர்தலில், நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தேர்தல் களத்தில் தனது முதல் வெற்றியை அக்கட்சி பெற்றுள்ளது.

தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 91,975 பதவிகளை நிரப்புவதற்காக இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 27ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 76.19 % வாக்குகளும், டிசம்பர் 30ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகளும் பதிவாகின. இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட நெ.சுனில் வெற்றி பெற்றுள்ளார். சுனிலை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம், அரசியல் தேர்தல் களத்தில் தனது முதல் வெற்றியை நாம் தமிழர் கட்சி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.