2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டி?

சென்னை: தமிழகத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் போட்டியிட இருப்பதாக தலைமைக்கழக நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

சீமான்

தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில், இதுவரை  தனித்தே போட்டியிட்டு வந்துள்ள கட்சி நாம் தமிழர் கட்சி. வீராவேசமாக பேசி அரசியல் செய்துவரும் சீமானுக்கு இளைஞர்கள் பலர் தொண்டர்களாக இருந்தும், தேர்தலில் அவரால் வாக்குகள் பெற முடியாத அவலமே நீடித்து வருகிறது.  அவரும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைவதும் வாடிக்கையாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற  விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தல்களிலும் போட்டியிட்டு, சில நுாறு ஓட்டுகள் மட்டுமே பெற்ற நிலையில், அடக்க மறுக்கும் சீமான்,  ‛‛அடுத்த சட்டசபை பொதுத் தேர்தலில் நான் நின்று விளையாடுவதை பாருங்கள்” என  வாய்சவடால் பேசி வருகிறார்.

இந்த நிலையில், மீண்டும், நாம் தமிழர் கட்சி சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்துவிட்டு, தேர்தல் பணிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக தீவிரமாக செய்து வருகின்றனர்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  தோல்வியடைந்தார்.  இதையடுத்து வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களை குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பல தொகுதிகள் அவருக்காக பரிசீலிக்கப்பட்ட நிலையில், இறுதியில்,  காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் சீமான் போட்டியிட முடிவு செய்துள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனார். இதையடுத்து அங்கு தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ கே.ஆர்.இராமசாமி. இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.