மருமகன் தற்கொலை முயற்சிக்கு நாம் தமிழர் கட்சியினர் தான் காரணம்….வைகோ கண்ணீர்

விருதுநகர்:

மருமகன் தற்கொலை முயற்சிக்கு நாம் தமிழர் கட்சியினர் தான் காரணம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோவின் மனைவி ரேணுகாவின் அண்ணன் ராமானுஜத்தின் மகன் சரவண சுரேஷ். இவர் தனது காரை விருதுநகர் ஸ்டேடியம் அருகே நிறுத்திவிட்டு அங்கேயே தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று தீயை அணைத்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அப்பலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அப்பலோ மருத்துவமனையில் சரவண சுரேஷின் உடல் நிலை குறித்து வைகோ கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் 3% பங்குகளை வாங்கியுள்ளதாக நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் வெளியிடும் மீம்ஸ்களை பார்த்து மனம் உடைந்தார். இதன் காரணமாகவே சரவண சுரேஷ் தற்கொலைக்கு முயன்றுள்ளார். நாம் தமிழர் கட்சியினரின் செயலால் தனது குடும்பத்தில் உள்ள அனைவருமே வேதனையில் உள்ளனர்’’ என்று கூறி கண்ணீர் விட்டு கதறினார்.