கருணாஸ் வீடு முற்றுகை: நாடார் சங்கங்கள் அறிவிப்பு

டிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸின் வீட்டை இன்று முற்றுகையிடப்போவதாக நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான கருணாஸ் எம்.எல்.ஏ., கடந்த ஞாயிறன்று சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், காவல்துறை அதிகாரிகளையும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பலரையும் கீழ்த்தரமாக பேசினார். மேலும், “மது குடிப்பதற்கே தினம் லட்சக்கணக்கில் செலவு செய்பவர்கள் நாங்கள்.  மற்றவர்கள் போதையல் கொலை செய்வார்கள். நாங்கள் ஸ்டடியாக இருக்கும்போதே பல் விளக்கும் நேரத்தில் கொலை செய்துவிடுவோம்” என்று பேசி அதிரவைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “வன்னியர்கள் தான் தமிழகத்தில் அதிகம் இருப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பொய் கூறி வருகிறார். , கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் முதலமைச்சரானதே சசிகலா போட்ட பிச்சைதான்.  நாடார் சமுதாயத்தை சேர்ந்த ஊடக உரிமையாளர்கள் அவர்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் செய்திகளை மட்டுமே வெளியிடுகிறார்கள்” என்றும் பேசினார்.

கருணாஸின் பேச்சுக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து தான் தவறுதலாக பேசிவிட்டதாக அவர் தெரிவித்தார். இதற்கிடையே அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், “நாடார்களை இழிவுபடுத்திப் பேசிய கருணாஸை கண்டித்து அவரது சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் வீட்டை இன்று பன்னிரண்டு மணிக்கு முற்றையிடப்போகிறோம்” என்று நாடார் சங்கங்கள் அறிவித்துள்ளன.

நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அன்பு நாடார் சொந்தங்களே காமெடியன் கருணாஸ் நாடார் சமுதாயத்தை தரக்குறைவாக பேசியுள்ளதை கண்டித்து, அனைத்து நாடார் சங்கங்களின் சார்பாக சென்னை சாலிகிராமம் கருணாஸ் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட இருக்கிறது.   அதிக அளவில் நாடார் சமுதாய சொந்தங்கள் கலந்து கொண்டு நமது எதிர்ப்பையும் ஒற்றுமையையும் காண்பிப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.