நதியா
நதியா

தியா நடித்து தீபாவளிக்கு வெளியாக இருக்கும் ‘திரைக்கு வராத கதை’ படத்துக்கு ஏக எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.
இந்தப் படத்தின் ஒரு காட்சியில்கூட ஆண்களே  கிடையாது. முழுக்க, முழுக்க பெண்களே நடித்துள்ள படம்.
கேரளாவின் முன்னனி நட்சத்திரங்களை வைத்து பல வெற்றி படங்களை இயக்கிய மலையாள இயக்குநரான துளசிதாஸ், தமிழில் இயக்கும் இரண்டாவது படம் இது.
இது எல்லாவற்றையும்விட எதிர்பார்ப்பை கிளப்பியதன் காரணம், வேறு.
இந்தப் படத்தில் பெண்கள் சம்பந்தப்பட்ட லெஸ்பியன் ஆபாசக் காட்சிகள் நிறைய இருந்ததாகவும், அதனால் படத்தின் பல காட்சிகளை தணிக்கை வாரியம் வெட்டச் சொன்னதாகவும் செய்திகள் பரபரப்பாக எழுந்தன. அதனால்தான் யு.ஏ. சர்டிபிகேட் அளிக்கப்பட்டது என்றும் பேச்சும் கிளம்பியது.
இந்த யூகங்களுக்கு  விளக்கம் சொல்லும் வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்   படத்தின் இயக்குநர் துளசிதாஸ்.
அப்போது அவர், “1989-ல் ஆரம்பித்த எனது திரைப்பயணத்தில் இன்றுவரை 34 படங்களை இயக்கியிருக்கிறேன். எப்போதும் ரசிகர்கள் குடும்பத்தோடு பார்த்து மகிழவேண்டும் என்பதை மனதில் வைத்து மிகுந்த பொறுப்புணர்வோடுதான் படங்களை இயக்குவேன்.
துளசிதாஸ்
துளசிதாஸ்

சிவகுமார் சார் நடித்த ‘வீட்டைப் பார் நாட்டைப் பார்’ படம்தான் நான் இயக்கிய முதல் தமிழ்ப் படம். அதன் பிறகு இப்போதுதான் தமிழில் படம் இயக்கியிருக்கிறேன்.  இப்படிப்பட்ட நான், இத்தனையாண்டுகள் கழித்து தமிழுக்கு வந்தவன், ஒரு தப்பான படத்தை கொடுப்பேனா..?
இந்தப் படத்தின் சிறப்பு அம்சமே படம் முழுக்க பெண்கள்தான் இருக்கிறார்கள். ஒரு காட்சியில்கூட ஆண்கள் இல்லை. கேரக்டராக மட்டுமில்லை.. ஏதாவது ஒரு காட்சியில் கும்பலில் ஒருவர். அல்லது தூரத்தில் ஒருவர் என்றுகூட ஒரு ஆணை நான் காட்டவில்லை.
பிலிம்  இன்ஸ்டிடியூட்  மாணவிகள் சிலர் ஒன்று சேர்ந்து சொந்தமாக ஒரு சினிமா தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அந்த முயற்சியில் கதையின் போக்கில் ஏற்படும் சம்பவங்கள் உண்மை சம்பவங்களாக மாறுகின்றன.  இதன் பின்னணியில்,  த்ரில்லர், சஸ்பென்ஸ் மற்றும் அதிரடி கலந்த படமாக உருவாகியிருகிறது ‘திரைக்கு வராத கதை.’
ஒரு காட்சியில் ஊசியில் எழுதப்பட்டிருக்கும் மருந்தின் பெயரையும், ஊசி போடும் காட்சியையும்தான் நீக்கச் சொன்னார்கள். வேறு எதுவுமில்லை. அதையும் நாங்கள் பொது நலன் கருதி ஏற்றுக் கொண்டோம். நீக்கிவிட்டோம்.
இந்த படத்தில் இருக்கும் திரில்லர் காட்சிகளுக்காகத்தான் சென்சாரில் U/A சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். மற்றபடி படத்தில் துளிகூட ஆபாசம் இல்லை. குழந்தைகளுடன், குடும்பம், குடும்பமாக வந்து பார்க்கக் கூடிய படம் இது“ என்றார்.
படத்தில் ஒரு காட்சி..
படத்தில் ஒரு காட்சி..

“பிறகு எப்படி லெஸ்பியன் படம் என்ற பெயர் வந்தது” என்ற கேள்விக்கும் பதில் அளித்தார்:
“இந்தப் படத்தைப் பொறுத்தவரை, லெஸ்பியன் என்கிற விஷயம் மையக் கருவாகக் இருக்கிறது. இது உண்மைதான். ஆனால் படத்தின் காட்சியில்.. ஏன்  ஒரு வசனம்கூட ஆபாசமாக இல்லை.
லெஸ்பியன் எனப்படும் ஓரினச் சேர்க்கை கலாச்சாரத்திற்குள் நமது பெண்கள் சிக்கி சீரழிந்து விடக்கூடாது என்கிற விழிப்புணர்ச்சியை ஊட்டும் படம்தான் இது. பெண்கள் அனைவரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்.” என்றார் இயக்குநர் துளசிதாஸ்.
இதில இன்னொரு வில்லங்கம் கிளம்பாம இருந்தா சரி.
லெஸ்பியன் தப்புன்னு எப்படி சொல்லப்போச்சு?  செக்ஸ் என்பது அவரவர் உரிமை. இதை சுப்ரீம் கோர்ட்டே உறுதிப்படுத்தியிருக்கு. இதை தவறு என்று எப்படிச் சொல்லலாம் என ஏதாவது பெண்கள் அமைப்பு போராடக்கூடும்.