கோஹிமா: நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில்-ஐஎம் அமைப்பின் தலைமை, மத்திய அரசின் இரண்டு புலனாய்வு அமைப்பினுடைய அதிகாரிகளுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினாலும், அம்மாநிலத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சூழல் மோசமடைந்துள்ளது.

ஐஎம் எனப்படும் ஐசாக் முய்வா பிரிவுதான், நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சிலில் அங்கம் வகிக்கும் ஒரு பெரிய குழுவாகும். இந்தக் குழுவுடன்தான், கடந்த 2015ம் ஆண்டு இந்திய அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது.

இந்நிலையில், அந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசின் சார்பாக கையெழுத்திட்ட மத்தியஸ்தரான ஆர்.என்.ரவி, அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டுமென்று அக்குழு கோரியுள்ளது. பிரதமர் மோடி முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

முன்னாள் ஐபி அதிகாரியான ரவி, கடந்த 2019ம் ஆண்டு நாகாலாந்து ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ரவி, நாகலாந்து முதல்வருக்கு, மாநிலத்தில், அரை டஜன் ஆயுதம் தாங்கிய குழுக்கள் மாநில அரசின் இறைமைக்கு சவால்விடும் வகையில் செயல்பட்டு வருவதாக கடிதம் எழுதியதையடுத்து, கடந்த மாதம் டெல்லிக்கு வந்ததாக கூறப்படும் என்எஸ்சிஎன்-ஐஎம் தலைவர் துய்ங்காலெங்  முய்வா, அவரை சந்திக்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.