கங்குலிக்கு நக்மாவின் பிறந்த நாள் வாழ்த்து – மீண்டும் கிளம்பிய பரபரப்பு!

கொல்கத்தா: முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரமும், பிசிசிஐ அமைப்பின் தற்போதைய தலைவருமான கங்குலிக்கு, நடிகை நக்மா தெரிவித்துள்ள பிறந்தநாள் வாழ்த்து பரபரப்பை கிளப்பியுள்ளது.

சவுரவ் கங்குலி, சமீபத்தில் தனது 48வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகை நக்மாவும் கங்குலிக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். இந்த வாழ்த்துதான் பலரின் கவனத்தை ஈர்த்து, தற்போது பரபரப்பிற்கு வித்திட்டுள்ளளது. ஏனெனில், கடந்த காலங்களில் இருவரும் பெரியளவில் கிசுகிசுவில் அடிபட்டவர்கள். காதலிக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால், அவை பின்னர் கங்குலி தரப்பில் மறுக்கப்பட்டன.

அந்த விஷயம் பல்லாண்டுகள் அப்படியே அடங்கியிருந்த நிலையில், தற்போது பிறந்தநாள் வாழ்த்தின் மூலம் மீண்டும் கிளம்பியுள்ளது.

ரசிகர்கள் பலர் நக்மாவின் வாழ்த்தை கிண்டலடித்துள்ளனர். “இந்த வாழ்த்தை, டோனாவுக்கு (கங்குலியின் மனைவி) பகிரவும் என்று ஒருவர் பதிவிட, அவரை பிளாக் செய்துள்ளார் நக்மா.

மேலும், பல ரசிகர்கள் இந்த வாழ்த்தை அடிப்படையாக வைத்து, இருவர் (கங்குலி & நக்மா) தொடர்பான மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழகத்தில், நடிகர் சரத்குமாருடனும் நக்மா இணைத்துப் பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.