நாக்பூர்:

பிரதமரின் ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனைகள் மறுத்து வருகின்றன.


பிரதமரின் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏழை,எளியவர்களுக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

மகாராஷ்ட்டிர மாநிலம் நாக்பூரில் இந்த திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை நடைபெற்று வந்தது.

ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதற்கான தொகையை வழங்காததால், கடந்த 3 மாதங்களாக அறுவை சிகிச்சை செய்வதை அரசு மருத்துவமனைகள் நிறுத்திவிட்டன.
இந்த திட்டத்தின் கீழ், தற்போது 50 நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.

ஆயுஸ்மான் பாரத் திட்டம் நாக்பூரில் உள்ள 4 அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு ரூ.1.5 லட்சம் முதல் 15 லட்சம் வரை செலவு ஆவதாகவும், இந்த பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொடுத்தால்தான், அறுவை சிகிச்சையை தொடர முடியும் என்று மருத்துவமனை நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.