நக்கீரன் கோபால் கைதை வரவேற்கிறேன்: டிடிவி தினகரன்

சென்னை:

க்கீரன் வார இதழ் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சியினர், ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்பதாக கூறி உள்ளார்.

புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை  வந்த நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் தமிழக காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டார்.  அவர்மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. அவரிடம் சிந்தாதிரிப் பேட்டை காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

நக்கீரன் வார இதழில் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது தொடர்பான செய்தியில் கவர்னர் மாளிகையையும், கவர்னர் பன்வாரிலால் தொடர்பு குறித்தும் தொடர்ந்து செய்தி வெளியிடுவதாக, கவர்னர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் இன்று காலை  கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கைது ஊடகத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், கைதுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில்,   நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது சரியே என்று  அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  கூறி உள்ளார்.

நக்கீரன் கோபால் கைது குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், நக்கீரன் கோபால் கைதை வரவேற்ப தாகவும்,  எந்தவித ஆதாரமும் இல்லாமல் தனிநபர்கள் மீது அவதூறாக செய்திகளை வெளியிடுவது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்த வகையில் நக்கீரன் கோபால் மீது வழக்கு தொடர்ந்து இருப்பதை நான் வரவேற்கிறேன். பத்திரிகை யாளர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

கடந்த, 1996ம் ஆண்டு என் மீது அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபாலுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை பெற்று கொடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

டிடிவி தினகரனின்.. கோபால் கைது வரவேற்பு செய்தி… செய்தியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.