நக்கீரன் கோபால் கைது!: பி.யூ.சி.எல். கண்டனம்

த்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு பி.யூ.சி.எல். கண்டனம் தெரிவித்துள்ளது.

நக்கீரன் வாரமிருமுறை இதழின் ஆசிரியர் ஆர்.ஆர்.கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்படாடர்.

மாணவிகளை தவறான வழிக்கு வற்புறுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவி குறித்த செய்தி நக்கீரன் இதழில் வெளியானது. அதில் தான் ஆளுநரை சந்தித்திருப்தாக நிர்மலாதேவி தெரிவித்திருப்பதாக வெளியானதாகவும், இதையடுத்து  ஆளுநர் தரப்பில் புகார் அளிக்கப்பட.. அதன் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பி.யு.சி.எல். அமைப்பு நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் தேசியக்குழு உறுப்பினரும் மூத்த பத்திரிகையாளருமா டி.எஸ்.எஸ்.மணி இது குறித்து தெரிவித்துள்ளதாவது:

“நக்கீரன் கோபால் கைது என்ற செய்தி பரபரப்பு மட்டுமல்ல, பீதியை ஏற்படுத்தும் ஒரு செய்தி. நிர்மலாதேவி வழக்கில் ஆளுநர் பற்றி வந்த செய்தி தவறு என்று ஆளுநர் மாளிகை கொடுத்த புகார்மீது விசாரணை நடக்கிறது என்கிறார்கள். விமான நிலையத்தில், புனே செல்லக் கிளம்பிய கோபால் கைது என்கிறார்கள்.

ஒரு புகார் வந்தால், காவல்துறை வழக்கை, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யலாம். அதற்காக கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. இது ஒரு “அத்து மீறலே.” இதற்குப் பெயர்தான் “கருத்துரிமை மீறல்”.

அதுவும் விமான நிலையத்தில் வைத்து ஒரு பிரபலமானவரை கைது செய்வது என்பது, சமீபகாலமாக, காவல்துறை செய்துவரும் பாணி. அதுவே ” அறிவுஜீவிகள் மத்தியில், அதிருப்தியின் குரலை எழுப்பாதீர்கள் என்று கொடிய எச்சரிக்கை செய்ய காவல்துறை கையாளும் புதிய பீதியுறவைக்கும் நடவடிக்கை”எனத் தெரிகிறது. ஆகவே இது கண்டிக்கத்தக்கது. கோபாலை உடனடியாக விடுதலை செய் என்ற குரலை எழுப்புகிறோம்” என்று டி.எஸ்.எஸ்.மணி,தெரிவித்துள்ளார்.