டில்லி:

நிர்மலாதேவி விவகாரத்தில் நக்கீரன் கோபால் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், தமிழக அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை யின்போது, சென்னை உயர்நீதி மன்றத்தின் தடைக்கு, உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது.

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக கவர்னர் குறித்து செய்தி வெளியிட்டதாக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால், மற்றும் ஊழியர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டது. அதில், கவர்னரை பணி செய்ய விடாமல் தடுத்தல், குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தல் கோபால் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  சம்மனை ரத்து செய்யக்கோரியும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரப்பட்டிருந்தது. இதை விசாரித்த   சென்னை உயர்நீதிமன்ற்ம்,  எழும்பூர் நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கும், விசாரணைக்கும் தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும்,  தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக நக்கீரன் கோபால் உள்பட குற்றம் சாட்டப்பட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.