Random image

நக்கீரன் கோபால் குடும்பத்திற்கு எதிரான வதந்தியின் வன்முறை

சிறப்புக்கட்டுரை: அ.குமரேசன்

ரு வதந்தியைச் செய்தியாக்கி வெளியிடுவதற்கும், ஒரு வதந்தியைச் செய்து பரப்புவதற்கும் இடையே பெருத்த வேறுபாடு இருக்கிறது. ஒரு வதந்தியைச் செய்தியாக்குவது என்பது, அது உண்மைதான் என்று உறுதிப்படுத்துவதாகவோ, அது உண்மைதானா என்று கேள்வி எழுப்புவதாகவோ, அது உண்மையாகத்தான் இருக்குமோ என்று சந்தேகம் கொள்ள வைப்பதாகவோ இருக்கலாம். அது உண்மையாகத்தான் இருக்கும் என்று ஊகிக்க வைப்பதாகவும் இருக்கக்கூடும்.

ஆனாலும் அது வதந்திதான் என்று காட்டும் வகையில், “….. என்று கூறப்படுகிறது,” “….. என்று பேசிக்கொள்ளப்படுகிறது,” ”…..என்றெல்லாம் சொல்லப்படுவது உண்மைதானா,” என்ற தொணியில் அந்தச் செய்திகள் முடிக்கப்பட்டிருக்கும். “இப்படியொரு பிரச்சினை பேச்சு அடிபடுகிறது என்றுதான் சொல்லியிருக்கிறோம், மற்றபடி இதுதான் நடந்திருக்கிறது என்று நாங்கள் நேரடியாக எதுவும் சொல்லவில்லை,” என்று சட்டப்பூர்வமாகத் தப்பிப்பதற்கு இதில் வழி இருக்கிறது.

ஒரு வதந்தியைச் செய்து பரப்புவது, வேண்டுமென்றே ஒரு பொய்ச்செய்தியை உற்பத்தி செய்து ஊரெல்லாம் ஊதிவிடுகிற திட்டமிட்ட செயல்தான். யாரைப்பற்றி அந்த வதந்தி உருவாக்கப்படுகிறதோ அவரை இழிவுபடுத்தி, பொதுவெளியில் அவர் மீது ஒரு அவமரியாதையை ஏற்படுத்துகிற உள்நோக்கம் இருக்கும். பழிவாங்குகிற அடிநோக்கமும் இருக்கும்.

சொறிமனம்

தமிழகத்தின் புலனாய்வு இதழியல் களத்தில் தனக்கான இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள ‘நக்கீரன்’, அருப்புக்கோட்டை கல்லூரிப் பேராசிரியர் நிர்மலா தேவி பற்றிய இதழியல் விசாரணை நூலின் ஒரு நுனியைப் பிடித்தால் மறுநுனி ராஜ்பவன் வரையில் செல்வதாக எழுதியது. அதன் ஆசிரியர் கோபால்  கைது செய்யப்பட்டார், நீதிமன்றத்தின் சரியான குறுக்கீட்டால் அவர் சிறையில் அடைக்கப்படுவது தடுக்கப்பட்டது. ஊடகச் சுதந்திரத்திற்காக வாதாடுவோர் கோபால் கைது நடவடிக்கையைக் கண்டித்தார்கள். அந்த ஏட்டில் இதுபோன்ற பல தொகுப்புகள் அதற்கு முன்பும் பின்பும் வந்துள்ளன.

இந்நிலையில் அண்மையில் சில நாட்களாக சமூக ஊடகங்களில் ‘நக்கீரன்’ கோபால் பற்றி அவதூறான தகவல்கள் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன. அவரைப் பற்றிய அவதூறு கூட அல்ல, அவருடைய துணைவியார் மீதான அவதூறு. வதந்திகளின் வலிமையே, உண்மை போலவே காட்சியளிப்பதுதான். பல நேரங்களில் உண்மைக்கே கூட அந்த வலிமை வாய்ப்பதில்லை!

வதந்தியில் ஒரு வசதி என்னவென்றால், “நான்தான் இதைச் சொல்கிறேன்” என்று அதை முதலில் சொன்னவர் முன்னால் வந்து நிற்க வேண்டியதில்லை. போலிப் பெயர்களில் பரப்புவார்கள் அல்லது அவர்களும் “…. என்று சொல்லப்படுகிறது” எனக்கூறும் உத்தியைக் கடைப்பிடிப்பார்கள். கோபால் துணைவியார் பற்றிய வதந்தியும் பினாமிப் பெயர்களில்தான் வலம் வருகிறது. பொதுவாக, தீவிர பாஜக ஆதரவாளர்கள் இதைச் செய்திருப்பதற்குக் கூடுதல் வாய்ப்பிருக்கிறது என்று ஊடகவியலாளர்கள் கருதுகிறார்கள்.

அவர்கள் அப்படிக் கருதுவதற்கான மற்றொரு பின்னணியாக, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சரையும் பாஜக பெண் தலைவர் ஒருவரையும் தொடர்புபடுத்தி ‘நக்கீரன்’ வெளியிட்ட ஒரு செய்தி சுட்டிக்காட்டப்படுகிறது. “பாஜக-வினரே சந்தேகத்தோடு பேசிக்கொள்கிறார்கள்” என்று அந்தச் செய்தி முடிகிறது. இதற்கு முன், அமமுக தலைவர் டி.டி.வி. தினகரன் பற்றியும் இத்தகைய ஒரு செய்தியை ‘நக்கீரன்’ வெளியிட்டது. அவருடைய ஆதரவாளர்கள் கூட இந்த வதந்தியைக் கிளப்பிவிட்டிருக்கலாம். அந்த ஏட்டில் வருகிற பலவகையான அம்பலப்படுத்தல் செய்திகளால் ஆத்திரப்பட்ட யாரோ இதைச் செய்திருக்கலாம், அதை இவர்கள் படியெடுத்துப் பரப்பியிருக்கலாம் என்ற வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை என்கிறார்கள் ஊடக நண்பர்கள்.

எதுவானாலும் கோபாலின் குடும்பத்தினரை வம்புக்கிழுப்பது மனிதப் பண்பற்ற வக்கிரம். கொஞ்சமும் நியாயப்படுத்த முடியாத வன்மம். பொதுக் கழிப்பறைச் சுவரில், தெருவைச் சேர்ந்த இருவரை இணைத்துக் கரிக்கோட்டுப் படம் வரைகிற சொறிமனம்.

மூர்க்க விதி

“ஒருவரை எதிரியாக முடிவுசெய்துவிட்டால், அவரை அவமானப்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மூர்க்க விதிதான் இங்கு செயல்படுகிறது. அவரோடு மோதட்டும். ஆனால் அவரது வாழ்க்கைத் துணையை அவமானப்படுத்தும் அநாகரிகத்தை ஒருபோதும் ஏற்பதற்கில்லை,” என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா கூறுவதில் முழு நியாயம் இருக்கிறது.

“தேர்தல் நெருங்க நெருங்க சங்கிகள் பதற்றத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல், மிக மிகக் கேவலமான நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள்,” என்று முகநூல் பதிவில் விமர்சித்திருக்கிறார் ‘சவுக்கு’ இணைய ஏட்டின் ஆசிரியர் சங்கர்.

இதன் இன்னொரு பக்கமும் கண் முன்னால் விரிகிறது. ஆளுநர் மாளிகைச் செய்தி விவகாரத்தில் கோபால் கைது செய்யப்பட்டபோது அதைக் கண்டித்து அநேகமாக எதிர்க்கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். பெரும்பாலான ஊடகவியலாளர்கள் அவரோடு தங்கள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் அத்தகைய எதிர்வினைகளைப் பெரிய அளவில் பார்க்க முடியவில்லை. ஏன்? ஒரு பத்திரிகையாக ‘நக்கீரன்’ தன்னை மறு ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்வதற்கு இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

உரிமையும் நெறியும்

ஊடகச் சுதந்திரம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதற்கு எள்ளளவும் குறையாத முக்கியத்தும் வாய்ந்தது ஊடக அறம். எந்தவொரு செய்தியையும் அல்லது கருத்தையும் எந்தவொரு ஊடகமும் தனது கண்ணோட்டத்தில், தனது சித்தரிப்புப் பாணியில் வெளிப்படுத்தும் உரிமை மறுக்க முடியாதது. நக்கீரனுக்கும் அது பொருந்தும். அதேவேளையில் எந்தவொரு ஊடகமும் எந்தவொரு காரணத்துக்காகவும் தனது சமூகப் பொறுப்பைக் கைவிடலாகாது. நக்கீரனுக்கும் அது பொருந்தும். ஒருவேளை, அரசியலிலோ வேறு துறைகளிலோ முன்னணியில் இருப்பவர்கள் பற்றிய இப்படிப்பட்ட ‘சந்தேகச் செய்திகளை’ வெளிப்படுத்துவது, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று காட்டுகிற சமூகப் பொறுப்புதான் என்று சிலர் வாதிடக்கூடும். அது அவரவர் மனசாட்சி சம்பந்தப்பட்டது.

ஆனால், ஒரு வாதத்திற்காக, ஊகமாகக் கூறப்படும் தகவல்கள் உண்மையானவையாகவே இருந்தாலும், ஒருவரது அந்தரங்க வாழ்க்கையில் தலையை நீட்டுகிற உரிமை யாருக்கும் இல்லை. அது தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்டவர்கள் தீர்மானிக்கிற வாழ்க்கை. அந்தத் தனிப்பட்ட வாழ்க்கைத் தேர்வினால், பொதுநலன் எந்த வகையில் பாதிக்கப்படுகிறது? மக்கள் வாக்காக வழங்கிய அதிகாரமோ, மக்கள் வரியாக வழங்கிய பணமோ அந்த அந்தரங்கத்திற்காக மடைமாற்றப்பட்டதா? பொதுமக்களின் வாழ்க்கை அந்தத் தனிப்பட்ட வாழ்க்கைக்காக எவ்விதத்திலாவது கைவிடப்பட்டதா?  அப்படிப் பாதிக்கப்படுமானால், மடைமாற்றப்படுமானால், கைவிடப்படுமானால் அதை அம்பலப்படுத்துவதில் தவறில்லை. அப்படி இல்லாதபோது அன்றாடங்காய்ச்சிகள் முதல் அதிகாரபீடத்தில் உள்ளவர்கள் வரையில் எவருடைய சொந்த வாழ்க்கையிலும் தலையிடுவது உலக அறமும் அல்ல, ஊடக அறமும் அல்ல.

“பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள் அதிலே செய்கிற குற்றங்களை மக்கள் கவனத்திற்குக் கொண்டுவரத்தான் வேண்டும். அவர்கள் தங்கள் தனிவாழ்க்கையையும் நல்ல முன்னுதாரணமாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதிலும் வியப்பில்லை. அவர்களது அரசியல், சமூக நிலைப்பாடுகளை ஆதரிக்கவும் எதிர்க்கவுமான உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் அவர்கள் தேர்வு செய்யும் சொந்த வாழ்க்கை முறையை அவர்களது கட்சியின் நிலைப்பாடு போலச் சித்தரிப்பது முறையல்ல,” என்கிறார் ஆதவன் தீட்சண்யா.

‘சவுக்கு’ சங்கர் தனது பதிவில், “அதேநேரத்தில் இதைப் போன்ற வதந்திகளையெல்லாம் ‘நக்கீரன்’ பலமுறை செய்தியாக்கியுள்ளது என்பதையும் நாம் மறுக்க முடியாது. ஒரு மோசமான வதந்தியின் வலி என்ன  என்பதை அன்பு அண்ணன் கோபால் உணர்ந்திருப்பார் என நம்புகிறேன். இதன் அடிப்படையில் அவரின் இதழியல் செழுமியங்களை மேம்படுத்துவார் என்றும் நம்புகிறேன்,” என்று கூறியுள்ளார்.

அம்ணமாகும் முரண்

சில ஆண்டுகளுக்கு முன்பு, சந்தனமர வீரப்பனை நேரில் சந்தித்து எழுதிய கோபாலுக்குப் பாராட்டுத் தெரிவித்து நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய நான், “நக்கீரனின் சித்தரிப்புகள் பலவற்றில் எனக்கு விமர்சனம் உண்டு,” என்று சொல்லிவிட்டுத்தான் எனது பாராட்டைத் தெரிவித்தேன். “இனிமேலும் பல ஆத்திர நெற்றிக் கண்கள் திறக்கப்படக்கூடும், ஆயினும் குற்றம் குற்றமே என்று பணி தொடர்க,” என்று வாழ்த்தினேன்.

நெற்றிக்கண் திறப்பு நிகழ்வுகளில் ஒன்றுதான் அவர் கைதுசெய்யப்பட்ட நடவடிக்கை. அதன் பின் திராவிடர் கழகத்தின் ‘விடுதலை’ ஏடு நடத்திய பாராட்டு நிகழ்வில் எனக்குப் பின் பேசிய ‘தி இந்து’ குழுமம் தலைவர் என்.ராம், இது போன்ற செய்திகளை நீங்கள் உங்கள் பத்திரிகையில் வெளியிடுவீர்களா என்று நீதிபதி தன்னிடம் கேட்டதையும், “இல்லை இது போல் நாங்கள் வெளியிட மாட்டோம், ஆனால் ‘நக்கீரன்’ கருத்துச் சுதந்திரத்தை முழுமையாக ஆதரிக்கிறோம்,” என்று பதிலளித்ததையும் பகிர்ந்துகொண்டார்.

கட்டுரையாளர் அ.குமரேசன்

இதையெல்லாம் சொல்வதால், கோபால் குடும்பத்தினரைக் காயப்படுத்தும் இழிசெயலை சிறு துணுக்களவு கூட நியாயப்படுத்துவதாகாது. இந்த வதந்தியைச் செய்து பரப்பியது பாஜக-வினர்தான் என்றால், ஒருபக்கம் நரேந்திர மோடி அரசாங்கம் பொய்ச்செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லிக்கொண்டிருப்பதிலும், இன்னொரு பக்கம் இவர்களே இப்படிப்பட்ட பொய்ச்செய்திகளால் திருப்திப்பட்டுக்கொண்டிருப்பதிலும் உள்ள முரண்பாடு அம்மணமாக நிற்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியதாகிறது.