எதிர்ப்பைக் கைவிட்டு ஆடை அணிந்த நிர்வாண சாமியார்கள்

கவுகாத்தி: வட கிழக்கு இந்தியாவில் கவுகாத்தியில் உள்ள புகழ் பெற்ற காமக்யா கோவிலில் நாகா  சாமியார்கள் தங்களின் நிர்வாண கோலத்தை கைவிட்டு, ஆடைகள் அணிந்து கோவிலை வலம் வந்தனர்.

கவுகாத்தி நகரை ஒட்டி உள்ள காமக்யா கோவில் புகழ் பெற்றதாகும். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இக் கோயிலில் வருடம்தோறும் அம்புபச்சி மேளா என்ற பெயரில், நான்கு நாள் விழா பிரம்மாண்டமாக நடக்கும். இதில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள்.

இந்த விழாவில் நாகா சாமியார்களும் பங்கேற்பார்கள். இவர்கள் எப்போதுமே ஆடை அணிய மாட்டார்கள். நிர்வாணமாகவே நடமாடுவார்கள். குறிப்பிட்ட இந்த விழாவிலும் அப்படியே பங்கேற்பார்கள்.

ஆனால் கடந்த சில வருடங்களாக, இதற்கு பக்தர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  இதையடுத்து கோவில் நிர்வாகம், இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் நாகா சாமியார்கள் ஆடை அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நாகா சாதுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நேற்று (ஜூன் 21 ), கோவில் வளாகத்தில் நிர்வாண கோலத்தில் பேரணி நடத்த இருப்பதாகவும் அறிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, கோவில் நிர்வாகம் நாகா சாமியார்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்து தங்கள் எதிர்ப்பை கைவிட்ட நாகா சாமியார்கள் இன்று ஆடை அணிந்து கோயிலுக்கு வந்தனர்.

இதையடுத்து தேவையற்ற சர்ச்சை முடிவுக்கு வந்தது என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் பக்தர்கள்.