மருத்துவ கவுன்சிலிங்: சுப்ரீம் கோர்ட்டில் நளினி சிதம்பரம் வழக்கு!

டில்லி,

மிழகத்தில் மருத்துவ சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை உடனே நடத்த கோரி உச்ச நீதிமன்றத்தில், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின்  மனைவி நளினி சிதம்பரம் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழக அரசுக்கு  விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு,  மத்திய அரசை வலி யுறுத்தி வருகிறது. இதன் காரணமாக அவசர சட்டம் இயற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் சட்டத்திருத்தத்தில் மத்திய அரசு இன்று ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில்,

இன்று தமிழகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் உச்சநீதி மன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ் பாடத்திட்டத்தில் படித்த  மாணவ மாணவிகளுக்கு எதிராக  சிபிஎஸ்இ  மாணவர்களுக்கு ஆதரவாக வாதாடி  நளினி சிதம்பரம், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு  விலக்கு கொடுக்கப் பட்டால் அதை எதிர்த்து வழக்கு தொடருவேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில்,  தமிழகத்தில் நீட் அடிப்படையில் மருத்துவ சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் வழக்கு தொடரந்துள்ளார்.

அதில், மருத்துவ கவுன்சிலிங் தொடங்கப்படாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளார்.

நளினி சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்று அவசர வழக்காக நாளை விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஒருவரே தமிழகத்தை சேர்ந்த கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவுக்கு எதிராக, வசதி படைத்தவர்களுக்கு ஆதரவாக  வழக்கு போட்டிருப்பது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.