பரோல் கேட்டு ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல்!

சென்னை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, தனது மகள் திருமணத்துக்காக பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துளளார்.

மகள் அரித்ரா திருமண விசயமாக  லண்டன் செல்ல வேண்டியிருப்பதால் 6 மாதம் பரோல் அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் ஆண்கள் சிறையில் உள்ளனர்.

முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்க வேண்டும் என்று நளினி உயர்நீதிமன்றத்திற்கும், மகளிர் ஆணையத்திடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில்,  தன்னுடைய மகள் திருமண வயதிற்கு வந்துவிட்டதால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வசதியாக சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று நளினி ஏற்கனவே கோரியிருந்தார்.

ஆனால் அவரது கோரிக்கைகளை தமிழக அரசு நிராகரித்து விட்டது.

இந்நிலையில் மகள் அரித்ராவின் திருமணம் சம்பந்தமான ஏற்பாடுகள் செய்ய லண்டன் செல்ல வேண்டி இருப்பதால் 6 மாதம் பரோல் கேட்டு நளினி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், நளினியின் கணவர் முருகன், தற்போது சாமியாராக சிறையில் இருக்கிறார். அவர், தான் ஜீவசமாதி அடைய விரும்புவதாகவும், அதற்கு அனுமதி அளிக்கும்படியும்  அனுமதி கேட்டு அரசு கடிதம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.