சென்னை:

நாமக்கல் குழந்தை விற்பனை தொடர்பாக ஏற்கனவே நர்ஸ் அமுதா மற்றும் அவரது கணவர்  கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது, கொல்லிமலை வாழவந்திநாடு அரசு மருத்துவ மனையில் பணியாற்றி வரும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், செவிலியர் பர்வின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை  தொடர்பான ஓய்வு பெற்ற செவிலியர் அமுதாவின் ஆடியோ வெளியானதையடுத்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி யுள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பில் இது குறித்து ஆய்வு செய்ய தலா ஒரு மருத்துவர் தலைமையிலான 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராசிபுரத்தில் 10 குழுக்களும் கொல்லி மலையில் 2 குழுக்களும் ஆய்வுப் பணியில் ஈடுபடுகிறது.

ராசிபுரத்தில் ஆய்வில் ஈடுபட உள்ள 10 குழுக்களில், ஒவ்வொரு குழுவிலும் ஒரு மருத்துவர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர், பயிற்சி பெற்ற செவிலியர்கள், மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் என 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுக்கள் ராசிபுரம் நகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த 4 ஆயிரத்து 800 குழந்தை களின் பிறப்பு சான்றிதழ்களை சரிபார்க்க இருக்கதாக கூறப்படுகிறது.

அதேபோன்று கொல்லிமலையில் தலா ஒரு மருத்துவர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர், பயிற்சி பெற்ற செவிலியர் உள்ளிட்ட தலா 5 பேரைக் கொண்ட கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொல்லிமலையில் வீடுகளில் அதிக அளவில் பிரசவம் நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில் அவ்வாறு பிறந்த குழந்தைகளின் விவரங்கள், முறைப்படி தத்துக் கொடுக்கப்பட்ட ஆவணங்கள், ஒரு குடும்பத்தில் 3க்கு மேல் பிறந்த குழந்தைகளின் விவரங்கள் உள்ளிட்டவற்றை இந்தக் குழுக்கள் ஆய்வு செய்யவுள்ளன.

இந்த நிலையில் தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குழந்தை கடத்தல் விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.