”நமஸ்தே ட்ரம்ப்”: விழாக்கோலம் பூண்டுள்ளது அகமதாபாத், 25 இடங்களில் கலை நிகழ்ச்சிகள்….

அகமதாபாத்:

2 நாள் பயணமாக இந்திய வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்,  இன்று நண்பகலில் குஜராத் மாநிலம் அகமதபாத் விமான நிலையம்  வருகிறார். அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

அங்கிருந்து கார் மூலம் விழா நடைபெறும் பகுதிக்கு செல்லும் வரையில், பல இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்த மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. சாலையில் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் வரிசையாக நின்று, டிரம்புக்கு வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இன்று காலை 11.40 மணிக்கு அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலானியாவும் அகமதாபாத் வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் வரவேற்கிறார்.

விமான நிலையத்தில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு ட்ரம்ப் காரில் செல்கிறார். வழிநெடுக 22 கி.மீ.தொலைவுக்கு மக்கள் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். வழியில் 30 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேடைகளில் கர்பா நடனம் உட்பட இந்தியாவின் 28 மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

வழியில் சபர்மதி ஆசிரமத்துக்கு ட்ரம்ப் செல்கிறார். அந்த ஆசிரமத்தை அவர் சுற்றிப் பார்க்க உள்ளார். ஆசிரமத்தை ஒட்டியுள்ள சபர்மதி கரையில் மேடை அமைக்கப்பட்டு ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா, பிரதமர் மோடிக்காக 3 இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

‘நமஸ்தே ட்ரம்ப்’ பின்னர், மதியம் 1.05 மணிக்கு அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு செல்கிறார். அங்கு அவரை வரவேற்று ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சுமார் 1.25 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

அமெரிக்க அதிபரின் வருகையை ஒட்டி அகமதாபாத் நகரில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 25,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.