அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் 

சண்டிகர்:

பொது இடங்களில் நமாஸ் தொழுகை நடத்தக்கூடாது என அரியான மாநில அரசு கடந்த 6ந்தேதி அறிவித்தது. இதன் காரணமாக மாநில இஸ்லாமியர்களிடையே அரசு மீது அதிருப்தி நிலவுகிறது.

பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதால், பாதிப்பு ஏற்படுவதாக இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பல இடங்களில் மோதல்களும் உருவானது.

இதைத்தொடர்ந்து, பொது இடங்களில் நமாஸ் தொழுகை நடத்த ஹரியானா அரசு கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டது. அதன்படி மாநிலம் முழுவதும்  100க்கும் மேற்பட்ட பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

இது இஸ்லாமியர்களுடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்களின் புனித நாள் என்றபடியால் தொழுகை நடத்த இடவசதி இல்லாமல் பெரும் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.

அரசு  அனுமதி அளித்துள்ள  25 பள்ளி வாசல்களில் மட்டுமே அனுமதியளிக்கப்பட்டதால் அங்கு ஏராளமானோர் குவிந்தனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவியது.

இஸ்லாமியர்கள்  பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தாக்கப்படுவதாக அரியானா அரசு மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அரியான முதல்வர்  மனோகர் கத்தார்,  முஸ்லீம்களின் தொழுகைக்கு அரசு எதிராக செயல்படவில்லை என்றும், இட நெருக்கடி இருந்தால் வீடுகளிலும் தனியார் அரங்குகளிலும் தொழுகை நடத்தலாம் எனவும் தெரிவித்தார்

அரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.