டில்லி:

வங்கி கடனை திருப்பி செலுத்தாத 100 பேரின் விபரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்கட்சிகள் ராஜ்யசபாவில் வலியுறுத்தின.

இந்த பிரச்னையை சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் நரேஷ் அகர்வால் எழுப்பி பேசுகையில்,‘‘சமீபத்தில் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத 12 நபர்களின் தொகை நாட்டின் மொத்த வராக்கடனில் 25 சதவீதமாக உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

ஆனால், அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது. விவசாயி அல்லது மாணவர் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் அவர்களது பெயர் விபரம் வெளியிடப்படுகிறது. ஆனால், பெரிய நிறுவன கடனாளிகளின் விபரங்களை வெளியிடுவது கிடையாது’’ என்றார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், ‘‘நாடாளுமன்றம் பெரியதா? அல்லது ரிசர்வ் வங்கி பெரியதா?. பட்ஜெட்டில் பொதுத் துறை வங்கிகளுக்கான முதலீட்டு தொகைக்கு நாடாளுமன்றம் தான அனுமதி அளிக்கிறது. பெரிய அளவிலான வராக்கடனாளிகளின் 100 பேர் பட்டியலை வெளியிட வேண்டும்.

நாட்டு மக்கள் இதை அறிய வேண்டும். யாருடைய பாதுகாப்பில் இவர்கள் உலா வருகிறார்கள் என்பதை அறிய வேண்டும். இதற்கு நாடாளுமன்ற தலைவர் மற்றும் நிதியமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோர் பதில் கூற வேண்டும். ’’ என்றார்.

அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட அருண்ஜேட்லி இதற்கு பதிலளிக்கவில்லை. நாடாளுமன்ற துணைத் தலைவர் குரியன் பேசுகையில்,‘‘ இப்பிரச்னை முக்கியமானது தான். ஆனால் முறையாக எழுப்பப்படவில்லை’’ என்றார்.

கடந்த 2016ம் ஆண்டு மார்ச் வரை ரூ. 6 லட்சம் கோடி வராக்கடன் இருப்பதால் பொதுத் துறை வங்கிகள் தடுமாறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.