பாலியல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட மறுநாளே தூக்கிலிட வேண்டும் : நமீதா

 

2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா, முகேஷ் சிங், அக்சய் குமார் சிங், வினய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் டெல்லி திஹார் சிறையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதனை பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக நமீதா தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டிக்கு அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

”நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். ஆனால், 7 ஆண்டுகளாகி விட்டன. எதற்காக நமது நாட்டில் இந்தத் தீர்ப்புக்கு இவ்வளவு தாமதம் என்பதைப் பார்க்க வேண்டும். கண்டிப்பாக வரும் காலத்தில் இதே மாதிரியான குற்றங்களுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும். அதுவும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இதே மாதிரி இன்னொரு சம்பவம் நடைபெறக் கூடாது. நமது அரசாங்கம் இது தொடர்பாகச் சட்டத்தைக் கடுமையாக்குவார்கள் என நம்புகிறேன். பாலியல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட மறுநாளே தூக்கிலிட வேண்டும்” என கூறியுள்ளார் .