டில்லி

மோ டிவியை பாஜகவின் ஐடி செல்  நிர்வகித்து வருவதாக அந்த அமைப்பின் தலைவர் அமித் மாளவியா தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி என்னும் பெயரை சுருக்கி நமோ டிவி என பெயரிடப்பட்ட பாஜகவின் தொலைக்காட்சி சேனல் பல டிடிஎச் ஆபரேட்டர்களால் ஒளிபரப்பப் பட்டு வருகின்றன.    இந்த தொலைக்காட்சியில் மோடியின் பேச்சுக்கள் மற்றும் பாஜக நிகழ்வுகள் மட்டும் ஒளிபரப்பப் படுகின்றன.    இந்த தொலைக்காட்சி தேர்தல் நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நன்னடைத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதாக  ஆம் ஆத்மி கட்சி புகார் அளித்தது.

அதை ஒட்டி தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் நமோ டிவி என்பது ஒரு விளம்பர தொலைகாட்சி எனவும் அதை ஒரு சில டிடிஎச் ஆபரேட்டர்கள் மட்டுமே ஒளிபரப்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.   இதனால் இந்த டிவி உரிமம் பெற தேவை இல்லை எனவும் அமைச்சகம் விளக்கம் அளித்தது.   ஆயினும் டிவி குறித்த சர்ச்சைகள் தொடர்கின்றன.

நேற்று பி எம் நரேந்திர மோடி என்னும் பயோபிக் திரைப்படம் தேர்தல் ஆணையத்தால் தேர்தல் முடியும் வரை  வெளியிட தடை விதிக்கப்பட்டது.   தேர்தல் ஆணைய வட்டாரத்தில் இந்த தடை நமோ டிவிக்கும் பொருந்தும் என நேற்று கூறப்பட்டது.   ஆனல் அதை ஆணையம் இன்று மறுத்துள்ளது.

நமோ டிவி குறித்த விவரங்களை பாஜகவின் ஐடி செல் தலைவர் அமித் மாளவியா தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ளார்.   அவர், “நமோ டிவி என்பது பாஜகவின் ஐடி செல் நிர்வகித்து வரும் சேனல் ஆகும்.  இது ஐடி செல் நடத்தி வரும்  நமோ செயலியில் ஒரு பகுதி ஆகும்.   பாஜக இந்த டிவியை டிடிஎச் மூலம் ஒளிபரப்ப  நேரங்களை கட்டணத்துக்கு வாங்கி உள்ளது” என தெரிவித்துள்ளார்.