தற்கொலை செய்து கொண்டாலும் செய்வேனே தவிர பாஜகவில் சேரமாட்டேன்: நாஞ்சில் சம்பத் ‘பொளேர்’

சென்னை: தற்கொலை செய்து கொண்டாலும் செய்வேனே தவிர பாஜகவில் சேரமாட்டேன் என நாஞ்சில் சம்பத்  கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் சிறிது காலம் டிடிவி தினகரனுடன் இருந்தார். பின்னர் தினகரன் அமமுகவை தொடங்கிய போது அந்த கட்சியில் இருந்து விலகினார். அரசியலுக்கே முழுக்கு போட்ட நாஞ்சில் சம்பத், திமுகவின் ஆதரவாளராக திரும்பினார்.

இப்போதும் திமுகவை தீவிரமாக ஆதரித்து வருகிறார். அண்மையில் பாஜகவில் சேருமாறு நாஞ்சில் சம்பத்துக்கும் அழைப்பு போனதாக சில தகவல்கள் வெளியாகின.

இந் நிலையில் நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் பிறவி திமுககாரன். எங்கள் பகுதியில் சுயமரியாதை இயக்கத்தை அறிமுகப்படுத்தியவர் என் தந்தை.

நான் தற்கொலை செய்து கொண்டாலும் செய்வேனே தவிர பாஜகவில் சேரவே மாட்டேன். ஏனெனில் அவ்வளவு மோசமான கட்சி பாஜக. கோவிந்த பன்சால், நரேந்திர தபோல்கர், கல்புரி, கவுரி லங்கேஷ் என பலரை படுகொலை செய்தவர்கள் பாஜகவினர்.

சிஏஏ சட்டம் மூலம் இந்தியா முழுவதுமான சமூக அமைதியை கெடுத்தவர்கள் பாஜகவினர். பலரது சாவுக்கும் நோவுக்கும் காரணமானவர்கள். அந்த கட்சியில் சேருவதுதான் என் விதி என்றால் என் கதையை நானே முடித்துக் கொள்வேன்.

பாஜகவில் இருந்து அழைப்பு வந்ததா என சொல்ல விரும்பவில்லை.  சட்டசபை தேர்தலில் திமுகவுக்குதான் நான் பிரசாரம் செய்வேன். நான் கட்சி அரசியல் என்கிற சிமிழுக்குள் சிக்க விரும்பவில்லை என்று நாஞ்சில் சம்பத் கூறினார்