தினகரனை அற்பத்தனமாக மிரட்டுகிறது பா.ஜ.க. அரசு!: நாஞ்சில் சம்பத்

சென்னை:

அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மத்திய பாஜக அரசு அற்பத்தனமாக மிரட்டுகிறது என்று அக் கட்சியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் குறறம்சாட்டியுள்ளார்.

அதிமுகவில் குழப்பமான சூழல் நிலவுகிறது.  அ.த.மு.க அம்மா அணியில் டிடிவி தினகரனின் கட்டுப்பாட்டில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள், தற்போது தனித்து செயல்பட்டு வருகின்றனர். தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாகவும் அறிவித்தனர்.

இதற்கிடையே இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை வந்துள்ள டில்லி போலீசார் குழு, இன்று தினகரனை விசாரிக்கும் என்றும் அவர் கைது செய்யப்படுவார் என்றும் செய்திகள் அடிபடுகின்றன.

இந்த நிலையில் இன்று மாலை அதிமுக தலைமையகத்தில் எம்.எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்ட இருப்பதாக தினகரன் தெரிவித்துள்ளார். இதைத் தடுக்க அமைச்சர் அணி தயாராகி வருகிறது. ஆகவே அதிமுகவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

தினகரனுக்கு பத்துக்கும் குறைவான எம்.எல்.ஏக்களே ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் “அசாதாரண சூழல் கழகத்தில் ஏற்பட்டுள்ளது. இது போன்ற ஆபத்துக்கள், சவால்களைக் கடந்துதான் ஒரு வல்லமையான தலைமை உருவாக முடியும். அப்படிப்பட்ட தலமையாக டிடிவி தினகரன் விளங்குவார்.

துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அதிமுக கட்டுக்கோப்பாக இயங்குகிறது. அவரது கண் அசைவில்தான் அனைத்துப் பணிகளும் நடக்கின்றன. தொண்டர்களின் முழு ஆதரவு அவருக்குத்தான் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “ மத்தியில் ஆளும் பாஜக அரசு,  அமைச்சர்களை தூண்டி விடுகிறது. மேலும் தினகரனை அற்பத்தனமாக மிரட்டி வருகிறது. இந்த மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். எந்தவித நடவடிக்கையையும் சட்டப்படி   எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்” எனறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.