நடிகர் நெப்போலியன் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.

சென்னை

பிரபல நடிகர் நெப்போலியன் ஹாலிவுட் படத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார்.

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப் பட்ட பல நடிகர்களில் நெப்போலியனும் ஒருவர்.  புது நெல்லு புது நாத்து என்னும் படத்தில் அறிமுகமாகி பல வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர்.  பின்பு கதாநாயகனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்த நெப்போலியன் அரசியலில் நுழைந்தார்.  அதன் பின் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

தற்போது அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், “நன் முதல் முறையாக ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கிறேன்.  “டெவில்ஸ் நைட் டான் ஆஃப் தி நைன் ரோக்” என பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தை சாம் லோகன் இயக்குகிறார்.  தமிழக பின்னணிப் பாடகர் தேவன் இசை அமைக்கிறார்.  இந்தப் படம் லைவ் சவுண்ட் முறையில் எடுக்கப்படுகிறது.  நான் இது வரை இப்படி நடித்ததில்லை

என் சொந்த ஊரான திருச்சியை சேர்ந்த கணேஷ் என்பவர் இந்த படத்தை தயாரிக்கிறார்.   எனது பத்து வருட கால நண்பர் அவர்.  அவரின் வற்புறுத்தலுக்கு இணங்க நான் இதில் நடிக்கிறேன்.  நான் எனது பெரும்பாலான காட்சிகளை நடித்துக் கொடுத்து விட்டேன்.  இன்னும் மிகச் சில காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது” என தெரிவித்துள்ளார்.