கணவன் நாக்பூரில் – மனைவி அமெரிக்காவில் : வாட்ஸ்அப் மூலம் விவாகரத்து

நாக்பூர்

வெளிநாட்டில் வசிக்கும் கணவன் மனைவிக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் விசாரணை நடத்தி நாக்பூர் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது.

நாக்பூரில் வசிக்கும் 37 வயது இளைஞர் தற்போது அமெரிக்காவில் மிச்சிகனில் வசித்ஹ்டு வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள செகந்திராபாத் நகரில் இந்த இளைஞருக்கு ஒரு பெண்ணை அவர் பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். இருவரும் பொறியியல் பட்டதாரிகள் என்பதால் அந்தப் பெண்ணும் இளைஞரும் மிச்சிகனில் பணி புரிந்து வந்தனர்.

இரண்டாண்டுகளில் அந்தப் பெண்ணின் விசா முடிவடைந்ததால் அவர் தனது புகுந்த வீட்டினருடன் நாக்பூரில் சில மாதங்கள் வசித்து வந்தார். அப்போது அவருக்கும் புகுந்த வீட்டினருக்கும் இடையே தகராறு உண்டானது. அதன் பிறகு கல்வி விசாவில் மேற்படிப்புக்காக அந்தப் பெண் மீண்டும் மிச்சிகன் சென்றார். அதற்குள் கணவன் மற்றும் மனைவி இடையே கருத்து வேற்றுமை உண்டானதால் கணவர் நாக்பூர் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு அளித்தார்.

நீதிமன்ற வரைமுறைப்படி இந்த வழக்கை கலந்தாய்வுக்கு அனுப்பினார்கள். இருவரும் வெளிநாட்டில் வசித்து வந்ததால் எந்த ஒரு விசாரணையும் நடைபெறவில்லை. இந்நிலையில் அந்த பெண்ணின் வழக்கறிஞர் ஸ்மிதா சரோட் என்பவர் நீதிமன்றத்துக்கு வெளியில் வழக்கை முடிக்க முயன்றார். அதை ஒட்டி கணவரும் அவர் வழக்கறிஞரும் மனைவியின் சகோதரர் மூலம் முதலில் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இரு சந்திப்புக்கு பிறகு இரு தரப்பினரும் விவாகரத்துக்கு ஒப்புக் கொண்டனர். அத்துட்ன் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் அந்தப் பெண்ணிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விவாகரத்துக்காக ரூ.10 லட்சத்தை இழப்பீடாக ஒரே தவணையில் பெற அந்தப் பெண் ஒப்புக் கொண்டார். அதை ஒட்டி இந்த தகவலை கலந்தாய்வாளருக்கு ஸ்மிதா தெரிவித்தார்.

கலந்தாய்வாளர் வாட்ஸ்அப் வீடியோ மூலம் கணவர் மற்றும் மனைவி ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது இருவரும் விவாகரத்து மற்றும் இழப்பீடு குறித்து தங்கள் ஒப்புதலை தெரிவித்தனர். அதை ஒட்டி கலந்தாய்வாளர் அவர்கள் இருவரும் ஏற்கனவே ஒரு வருடத்துக்கு மேல் பிரிந்து வாழ்வதாலும் அவர்களுக்கு விவாகரத்து அளிக்க பரிந்துரை செய்தார்.

அதை ஒட்டி இருவருக்கும் நாக்பூர் குடும்ப நீதிமன்றம் விவாகரத்து அளித்தது.