புதுவை:
புதுவை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்துள்ளார்.

புதுவையை மீட்போம், காப்போம்’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினர் கடந்த ஜனவரி 8ஆம் தேதி போராட்டத்தை மறைமலை அடிகள் சாலையில் தொடங்கியுள்ளனர். இரும்புச் சங்கிலியால் பூட்டப்பட்ட ஆளுநர் மாளிகை படத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இதில் ‘மோடியே கிரண்பேடியைத் திரும்பப் பெறு’, ‘கிரண்பேடியே திரும்பிப் போ’ என்ற வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசு புதுவையைப் புறக்கணிக்கிறது. ஆளுநர் கிரண்பேடி மாநில வளர்ச்சியைத் தடுக்கிறார். கடந்த நான்கரை ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். மத்தியில் உள்ள பாஜக அரசு, தமிழகம், புதுவை மக்கள் ஏற்காத பல திட்டங்களை நம் மீது திணித்து வருகிறது. நாம் வைக்கும் கோரிக்கைகளை செவிகொடுத்துக் கேட்பதில்லை. புதுவைக்குத் தர வேண்டிய நிதி, மானியங்களைத் தருவதில்லை. தற்போது போராட்டத்தைத் தடுப்பதற்காக மத்தியப் படையைக் கொண்டுவந்து மிரட்டுகின்றனர். நம் நாட்டில் ஆளுநருக்கு எதிராக முதல்வர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போராடிய சரித்திரமே கிடையாது.

படிப்படியாக புதுச்சேரியின் அதிகாரங்களைப் பறித்து தமிழகத்தோடு இணைப்பதற்காக மோடியும், கிரண்பேடியும் பல்வேறு சதிகளைச் செய்கின்றனர். ஆளுநர் கிரண்பேடி நடவடிக்கைகளுக்குப் பிரதமர் மோடி உறுதுணையாக உள்ளார். தற்போது அவருக்கு ஒரு விண்ணப்பம், கோரிக்கை விடுக்கிறேன். ஆளுநர் கிரண்பேடியை உடனடியாகத் திரும்பப் பெறுங்கள். கிரண்பேடியை உடனடியாகப் புதுவையை விட்டு வெளியேற்றுங்கள் என்று பேசினார்.

இந்நிலையில், இன்று புதுவை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்துள்ளார். கையெழுத்து இயக்கம் போராட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.