டில்லி

ர் இந்தியாவின் சென்னையில் இருந்து டில்லி சென்ற விமானத்திலிருந்த உணவு ட்ராலியில் போதைப் பொருள் அடங்கிய பாக்கெட் ஒன்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது

ஏர் இந்தியாவின் விமானம் ஒன்று சென்னையிலிருந்து டில்லிக்கு சென்றுள்ளது.  அதில் உணவுப் பொருட்கள் அடங்கிய டிராலி ஒன்று சென்னையில் இருந்து ஏற்றி அனுப்பப்பட்டுள்ளது.  அதை விமானத்தின் ஊழியர்கள் மட்டுமே கையாள முடியும்.   பயணம் முடிந்து அந்த டிராலி டில்லியில் இறக்கப்பட்டது.

அப்போது கஸ்டம்ஸ் அதிகாரிகள் அந்த டிராலியின் அடிப்பாகத்தில் ஒரு பாக்கெட் இருந்ததை கண்டு பிடித்தனர்.  விமான அதிகாரி ஒருவர் அந்த  பாக்கெட் உணவு டிராலியில், ஸ்பூன், கத்தி போன்ற பொருட்களுடன் இருந்ததாக கூறுகிறார்.  பிரவுன் நிறத்தில் இருந்த அந்தப் பொருள் ஏதும் போதைப் பொருளாக இருக்கலாம் என்னும் சந்தேகத்தில் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

பரிசோதனையில் அது மார்ஃபின் கலந்த ஒரு பொருள் எனவும் அதன் எடை 1895 கிராம்கள் எனவும் தெரிய வந்துள்ளது.   இது விமானத்தின் ஊழியர்கள் மூலம்தான் நடந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.  மேற்கொண்டு விசாரணை நடைபெறுகிறது.