உர்ஜித் பட்டேலை வெளியேற்ற மோடி அரசு முயற்சி: ஸ்டாலின் கண்டனம்

சென்னை:

ந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தில் பாரதியஜனதா அரசு தலையிடுகிறது என்றும், இதன் காரணமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலை வெளியேற்ற மோடி அரசு முயற்சி செய்துவருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மேலும், அரசியல் அமைப்பு சட்டத்தின் 7-வது பரிவை பயன்படுத்தி தன்னாட்சி பெற்ற  ரிசர்வ் வங்கியை கைப்பற்ற மோடி அரசு முயச்சி செய்கிறது என்றும் கூறி உள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் வெளியீட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதிலிருந்து மத்திய வங்கியுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரும் இடையூறாகவும், ஆபத்தாகவும் மாறியிருக்கிறது.  ரகுராம் ராஜனுக்கு கடும் நெருக்கடி கொடுத்து முன்பு ரிசர்வ் வங்கியை விட்டு வெளியேற்றினார்கள். இப்போது  தற்போதுள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் நெருக்கடி கொடுத்து வெளியேற்ற திட்டமிடுகிறார்கள்.

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா “ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அந்தஸ்து சீர்குலைக்கப்பட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்” என்று மத்திய அரசின் குறுக்கீடு குறித்து எச்சரித்தப் பிறகும், நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், “கார்ப்பரேட் முதலாளிகளை” காப்பாற்றவும் மத்திய அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்வது மிகுந்த வேதனையளிக்கிறது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில், மீண்டும் ஒரு முறை “கவர்ச்சிகர வாக்குறுதிகளை” அள்ளி விட்டு வாக்காளர்களைத் திசைதிருப்பி ஏமாற்றுவதற்காக, “கடன் வழங்குவது”  “ரொக்க கையிருப்பு”  “பணப் புழக்கம்” “வட்டி விகிதம்” போன்ற பல்வேறு ரிசர்வ் வங்கியின் கொள்கைகளில் “பா.ஜ.க.வின் வசதிக்கு ஏற்ற” மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது பா.ஜ.க. அரசின் நான்கரையாண்டு கால நிர்வாகத்தை நாட்டுக்கு நன்றாகவே உணர்த்தியிருக்கிறது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் “பல்லாயிரம் கோடி” கடன்களைப் பெற்று பெரும் முதலாளி களை வெளிநாட்டிற்கு செல்ல அனுமதி அளிப்பது பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் போன்றவற்றை “நள்ளிரவில்” அறிவித்து, நாட்டின் பொருளாதாரத்தை சுக்கு நூறாக நொறுக்கியது எல்லாம் பா.ஜ.க அரசு  தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க முயல்கிறது.

நிலையான பொருளாதார வளர்ச்சியைக் கொடுக்க முடியாத பிரதமர் நரேந்திர மோடியும், நிதி யமைச்சர் அருண் ஜெட்லியும் தங்கள் தோல்விகளை மறைக்க இதுவரை எந்த மத்திய அரசும் பயன்படுத்தாத “பிரிவு 7-ஐ” பயன்படுத்துவது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல நிர்வாக சுதந்திரத்தை தோற்கடிக்கும் திட்டமிட்டச் செயலாகும்.

நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலைய வைக்கும் உள்நோக்கத்துடன் மத்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை மத்திய பா.ஜ.க அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.