புதுடெல்லி:

விண்வெளியில் வலம் வரும் செயற்கைக் கோளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை மிஷன் சக்தி வெற்றியடைந்ததை மக்களவை தேர்தலுக்கு சாதகமாக பயன்படுத்துவது, பிரதமருக்கு ஏற்பட்டுள்ள பயத்தை காட்டுவதாக ஃப்ரண்ட் லைன் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஃப்ரண்ட் லைன் இணையம் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம்:

இது குறித்து ட்விட்டர் பதிவில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, முக்கிய தகவலை வெளியிடப்போவதாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அறிவிப்பை கடந்த புதன்கிழமை வெளியிட்டார்.

கடந்த 5 ஆண்டுகளில் இப்படி பல சஸ்பென்ஸ் அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஜெய்ஸி- இ-முகமது இயக்கத் தலைவர் மவுலானா இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டாரா? அல்லது அவர் கொல்லப்பட்டாரா? பெரும்பாலோர் மறந்துபோன மும்பை தாதா தாவூத் இப்ராகீம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டாரா? அல்லது இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக மற்றொரு தாக்குதலை நடத்தியதா போன்ற கேள்விகள் எழுந்தன.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போதும் இதே போன்ற சஸ்பென்ஸ் தான் இருந்தது. இதனால் பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

விண்வெளியில் வலம் வரும் செயற்கைக் கோளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை மிஷன் சக்தி வெற்றிகரமாக மேற்கொண்டதன் மூலம் வல்லமை கொண்டுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா,ரஷியா, சீனா ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இது அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிட்ட அறிவிப்பு என கூறப்படுகிறது. மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிரதமரின் இத்தகைய உணர்ச்சிப் பூர்வ அறிவிப்பு உளவியல் ரீதியாக வாக்காளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாக கருத்து எழுந்துள்ளது.

அதேசமயம், செயற்கைக் கோளை ஏவுகணை தாக்கி அழிப்பதால் என்ன பயன் என்ற கேள்வியையும் வாக்காளர்கள் எழுப்ப வாய்ப்பு உள்ளது.

2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலைப் போல் 284 தொகுதிகளில் வெற்றி பெற முடியாது என்பதால், இது போன்ற வழிகளை பாஜகவினர் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இத்தகைய அறிவிப்பின் மூலம் பிரதமர் மோடிக்கு உள்ளூர பயம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது என்றும் எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன.