முள்ளங்கியை விளைவிப்பது என்ன பெரிய ஏவுகணை அறிவியலா என்று இனி யாரும் கேலி பேச முடியாது, ஆம், முள்ளங்கியை இப்போது சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் விளைவித்து வருகிறது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா.

சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு நீர் சத்து மிக்க காய்கறியான முள்ளங்கியை சாறு பிழிந்து கொடுப்பது நம் ஊர் வழக்கம், சிறு கார தன்மையுடன் இருந்தாலும், இதனை சாப்பிட்டுவிடுவார்கள், இதை தவிர முள்ளங்கியை பெரிதாக விரும்பி சாப்பிடுபவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

என்றாலும், விண்வெளியில் காய்கறிகளை விளைவிக்க நாசா எடுத்துவரும் பரிசோதனை முயற்சியில், இந்த முள்ளங்கிக்கு மட்டும் எப்படி முக்கியத்துவம் கிடைத்தது என்று யாருக்கும் தெரியவில்லை.

இந்த செடிகளுக்கு தேவையான தண்ணீர் ஊற்றமுடியாது என்பதாலும், விண்வெளியில் தண்ணீர் மிதக்கும் தன்மை கொண்டது என்பதாலும், நாம் கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ‘வெட் டிஸ்யூஸ்’ போன்ற டிஸ்யூ பேப்பர்களைக் கொண்டு இந்த செடிகளுக்கு தண்ணீர் தெளித்து வளர்த்துவருகின்றனர்.

காய்கறி கடையில் முள்ளங்கியைப் பார்த்து முகம் சுழித்து வருபவர்கள் கூட இனி, முள்ளங்கிக்கு வந்த வாழ்வைப் பார்த்து வியப்பாக பார்க்கப் போவது மட்டும் உண்மை.