விக்ரம் லாண்டர் குறித்த புதிய படத்தை வெளியிட்ட நாசா

வாஷிங்டன்

ஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கருவி நிலவில் இறங்கிய பகுதி குறித்த படங்களை நாசாவின் எல்ஆர்ஓசி கருவி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

விக்ரம் லேண்டர் கருவி ‘சாப்ஃட் லேண்டிங்’ மூலம் தரையிறக்க இஸ்ரோ முயற்சித்த நிலையில், திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஆனால், நாசா வெளியிட்ட புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் கருதி சாப்ஃப்ட் லேண்டிங்கில் விழவில்லை, ‘ஹார்ட் லேண்டிங்’ எனப்படும் தரையில் மோதி விழுந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2  வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அந்த விண்கலம் 48 நாட்கள் பயணத்துக்குப் பின் கடந்த 7-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்கத் திட்டமிடப்பட்டு இருந்தது.   விக்ரம் லேண்டர் சாஃப்ட் லேண்டிங் ஆவதைக் காணப் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி மையத்தில் ஏராளமான முன்னாள் விஞ்ஞானிகள், இஸ்ரோ விஞ்ஞானிகள் காத்திருந்தனர். இந்நிகழ்ச்சியைக் காணப் பிரதமர் மோடியும் இஸ்ரோவுக்கு வந்திருந்தார்.

விக்ரம் லாண்டரை நிலவின் தென்துருவத்தில் உள்ள மான்சினஸ் சி மற்றும் சிம்பிலியஸ் எஸ் எனும் இரு பள்ளங்களுக்கு இடையே தரையிறக்க விஞ்ஞானிகள் கடந்த 7-ம் தேதி முடிவு செய்திருந்தனர்.  திடீரென விக்ரம் லேண்டர் கருவியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.  அதையொட்டி விக்ரம் லேண்டர் கருவியைத் தொடர்புகொள்ள இஸ்ரோ சார்பில் பலமுறை முயற்சி மேற்கொள்ளப்பட்டும் முடியவில்லை.   தற்போது நிலவில் 14 நாட்கள் இருக்கும் வெயில் காலம் முடிந்து நிலவில் அடுத்த 14 நாட்கள் குளிர்ந்த காலம் இருந்துவருவதால், ஏறக்குறைய விக்ரம் லேண்டர் கருவி செயலிழந்து விடும் எனக் கூறப்பட்டது

நாசாவின் லூனார் ரீகான் அசெயன்ஸ் ஆர்பிட்டர் கேமிரா (எல்ஆர்ஓசி) கருவி நிலவில் விக்ரம் லேண்டர் விண்கலம் தரையிறங்கிய பகுதியைப் புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது. நாசாவின் இந்தக் கருவி கடந்த 17-ம் தேதி இந்தப் பகுதியைக் கடந்து சென்றபோது இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது    நாசாவின் இந்தப் புகைப்படம் நிலவின் தென்பகுதியில் விக்ரம் தரையிறங்கியதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து 150 கி.மீ. பரப்பளவில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போதுள்ள சூரிய அஸ்தமனம் மற்றும் வெளிச்சக் குறைவு காரணமாகப் புகைப்படங்களும் தெளிவாக இல்லை.

நாசா, ” இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கருவி நிலவின் தென்பகுதியில் சாஃப்ட் லேண்டிங் எனச் சொல்லப்படும் மெதுவாகத் தரையிறக்குதல் முறையில் இறங்கவில்லை. மாறாக, நிலவின் தரைப்பகுதியில் மோதி விழுந்துள்ளது. எந்த இடத்தில் விக்ரம் லேண்டர் கருவி விழுந்து இருக்கிறது என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளது.

எல்ஆர்ஓ கருவி இயக்கத்தின் துணைத் தலைவர் ஜான் கெல்லர் ” நாசாவின் எல்ஆர்ஓ கருவி கடந்த  17-ம் தேதி எடுத்த விக்ரம் லேண்டர் கருவி குறித்து எடுத்த புகைப்படம் தெளிவாக இல்லை.  நிலவில் தற்போது கடும் குளிரும், இருளும் இருக்கிறது. வரும் அக்டோபர் 14 ஆம் தேதி மீண்டும் எல்ஆர்ஓ கருகி நிலவின் தென்துருவப் பகுதியைக் கடக்கும் போது நிலவில் பகல் காலமாக இருக்கும்.  ஆகவே அப்போது எடுக்கும் புகைப்படம் தெளிவாக இருக்கும் என்று நம்புகிறேன்

விக்ரம் தரையிறங்கிய பகுதியில் நிழல்கள் அதிகமாக இருந்ததால், புகைப்படங்கள் தெளிவாக இல்லை.   ஆகவே விக்ரம் லேண்டர் கருவி மறைந்திருக்கவும் வாய்ப்புண்டு. வரும் அக்டோபர் மாதம் எல்ஆர்ஓ கருவி இப்பகுதியைக் கடக்கும் போது சாதகமான புகைப்படங்கள் வரும் சமயத்தில் விக்ரம் லேண்டர் கருவி எங்கு இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Chandrayaan-2, Nasa, New photo, Vikram Lander
-=-