வாஷிங்டன்

நாசாவால் ஏவப்பட்டு சூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று 11.5 லட்சம் கோடி மைல் தூரத்தில் பழுதான வாயேஜர் 2 விண்கலம் பூமியில் இருந்தே சரி செய்யப்பட்டுள்ளது.

சுமார் 41 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா வாயேஜர்2 என்னும் விண்கலத்தை ஏவியது.  இந்த விண்கலம் தொடர்ந்து பயணம் செய்து சூரியக் குடும்பத்தைத் தாண்டி இண்டர்ஸ்டெல்லர் என்னும் விண்வெளி நட்சத்திரப் பகுதியை 2017 ஆம் ஆண்டு அடைந்தது.   இது பூமியில் இருந்து இந்த பகுதியை அடைந்த 2 ஆம் விண்கலம் ஆகும்.

கடந்த மாதம் 28 ஆம் தேதி அன்று இந்த விண்கலம் திடீரென செயல் இழந்தது.  இதற்கான காரணம் ஏதும் அப்போது கண்டறியப்படவில்லை.  இது உலகத்தையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.   இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்ட கருவிகள் 360 டிகிரியில் சுற்றி அனைத்து ஆய்வுகளையும் செய்து வந்த போது இந்த விண்கலம் நகராமல் நின்றதால் ஆய்வும் தடைப்பட்டது.  இந்த விண்கலம் பூமியில் இருந்து 11.5 லட்சம் கோடி மைல்களுக்கு அப்பால் இருந்தது.

இங்கிருந்தே நாசா இந்த பழுதை சரி செய்யும் முயற்சியில் இறங்கியது.   இதற்கு இந்த விண்கலம் தன்னிடம் உள்ள மின் சக்தியை அதிக அளவில் பயன்படுத்தியதால் பாதுகாப்பு மென்பொருள் விண்கலத்தை நிறுத்தி விட்டது தெரிய வந்தது.  இந்த மென்பொருள் இந்த விண்கலத்தில் அதிக அளவில் மின்சக்தி செலவாகும் போது இயக்கத்தை நிறுத்தும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.

நாசா அந்த விண்கலத்தில் அதிக மின்சக்தி செலவாவதைக் குறைக்க இங்கிருந்தே பணிகளை மேற்கொண்டது.  இந்த பணியில் வெற்றி அடைந்ததை அடுத்து தற்போது இந்த வாயேஜர் 2 விண்கலம் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது.    கடந்த புதன்கிழமை அன்று இரவு 10 மணிக்கு இந்த பழுது சரி பார்க்கப்பட்ட தகவலை நாசா தனது டிவிட்டரில் வெளியிட்டது.

இந்த தகவல் தற்போது நாசாவால் உறுதி செய்யப்பட்டுள்ளது.   வாயேஜர் 2 விண்கலத்துக்கு அனுப்பப்படும் தகவல்கள் அங்குச் சேர 17 மணி நேரம் ஆகும்.  அதைப் போல் வாயேஜர் 2 விண்கலத்தில் இருந்து பதில் கிடைக்க மற்றொரு 17 மணி நேரம் ஆகும்.  இதற்கு வாயேஜர் 2 மற்றும் பூமிக்கு இடையில் உள்ள தூரமே காரணம் ஆகும்.  எனவே வாயேஜர் 2 அளித்த தகவல்கள் சரிபார்க்கப்பட்டு தற்போது நாசா இந்த தகவலை உறுதி செய்துள்ளது.