இன்று இரவு செவ்வாயில் கால் பதிக்கிறது நாசாவின் இன்சைட் விண்கலம்

--

வாஷிங்டன்:

மெரிக்க விண்வெளி மையத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட ‘இன்சைட்’ விண்கலம் இன்று இரவு செவ்வாய் கிரகத்தில் தனது முதல் அடியை எடுத்து வைக்க உள்ளதாக நாசா தெரிவித்து உள்ளது.

சுமார் 6 மாதமாக பயணம் செய்த ‘இன்சைட்’  இன்று நள்ளிரவில் செவ்வாய் கிரகத்தில் தரை யிறங்கி தனது ஆய்வுகளை தொடங்க உள்ளது. இந்த விண்கலம் ஒரு ரோபோ என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா, அங்கு மனிதர்கள் வாழ முடியுமா? என்பது குறித்து ஆய்வுகள் செய்ய  அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இன்சைட் விண்கலத்தை, கடந்த மே மாதம் 5ம் தேதி செவ்வாயை நோக்கி  விண்ணில் ஏவியது. இந்த  விண்கலம், சுமார் 50 கோடி கிலோ மீட்டர் தொலைவு பயணித்து, செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ளது. இன்று நள்ளிரவு இன்சைட் தனது காலை செவ்வாயில் பதிக்க உள்ளது.

இது  உலக வரலாற்றில் இன்று நாசா மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

ஏற்கனவே செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு அமெரிக்காவும், ரஷ்யாவும் விண்கலங்களை அனுப்பி உள்ளது. வைகிங் 1, வைகிங் 2, பீனிக்ஸ், க்யூரியாசிட்டி, ஸ்பிரிட், மார்ஸ் பாத் பைண்டர், ஆபர்ஜுனிட்டி ஆகிய நாசாவின் திட்டங்களும், மார்ஸ் 3 என்ற ரஷ்யாவின் விண்கலமும் வெற்றிகரமாக செவ்வாய்க்கு ஆராச்சிக்காக சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தற்போது சென்றிருக்கும் இன்சைட் ரோபோவானது, செவ்வாயின் உட்புறத்தை சோதனை செய்ய போகிறது.  செவ்வாயில் ஏற்படும் நிலநடுக்கம், தரையில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம், செவ்வாய்க்கு உட்புறம் உள்ள மூலக்கூறுவில் ஏற்படும் மாற்றம் ஆகியவற்றை கணக்கிடும். இதுவரை எந்த விண்கலமும் செவ்வாயின் உட்புறத்தை சோதனை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.